விவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி வரை வங்கியில் கடன் பெற்று ஏமாற்றிய சர்க்கரை ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை தஞ்சை எஸ்பியிடம் புகார்

தஞ்சை, மே 21: விவசாயிகள் பெயரில் ரூ.360 கோடி வங்கி கடன் வாங்கி ஏமாற்றிய சர்க்கரை ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தஞ்சை எஸ்பியிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையும், திருவிடைமருதூர் தாலுகாவில் கோட்டூரில் உள்ள அம்பிகா சர்க்கரை ஆலையும் ஒரே நிர்வாகத்தின்கீழ் இயங்கி வருகிறது. இந்த 2 சர்க்கரை ஆலையிலும் கடந்த 2 ஆண்டுகளாக விவசாயிகள் அரவை செய்த கரும்புக்கான பாக்கித்தொகை ரூ.82 கோடி இதுவரை ஆலை நிர்வாகம் வழங்கவில்லை. இதற்கிடையில் இவ்விருது ஆலை நிர்வாகமும், விவசாயிகள் கரும்பை பதிவு செய்தபோது அவர்களிடம் பல்வேறு படிவங்களில் கையெழுத்து பெற்று கொண்டு அதை வைத்து கும்பகோணத்தில் உள்ள பல வங்கிகளில் விவசாயிகளின் பெயரில் ரூ.360 கோடி வரை கடனை பெற்று மோசடி செய்துள்ளன.

அதேநேரத்தில் கடலூர் மாவட்டம் சித்தூரில் இதே சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு சொந்தமான சர்க்கரை ஆலையிலும் விவசாயிகள் பெயரில் வங்கியில் ரூ.80 கோடி வரை கடன் பெற்றுள்ளனர். அதில் விவசாயி ஒருவர் கொடுத்த புகாரின்பேரில் கடந்த 8ம் தேதி கடலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், சர்க்கரை ஆலை உரிமையாளர் தியாகராஜனை கைது செய்து விசாரித்தனர்.

இந்நிலையில் தஞ்சை விவசாயிகளுக்கு வங்கிகளிலிருந்து கடந்த சில மாதங்களாக அசலும், வட்டியும் செலுத்த வேண்டுமென ஒவ்வொரு விவசாயி பெயருக்கும் வக்கீல் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விவசாயிகள், தஞ்சை கலெக்டரிடம் பலமுறை புகார் மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் ரவீந்திரன் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 25க்கும் மேற்பட்டோர் தஞ்சை எஸ்பி மகேஸ்வரனிடம் புகார் மனு அளித்தனர். அதில் கும்பகோணம் கார்ப்பரேசன் வங்கியில் 212 விவசாயிகள் பெயரில் ரூ.45 கோடி வரை ஆலை நிர்வாகம் கடன் பெற்றுள்ளது. இதுபோல் பல வங்கி கிளைகளில் ரூ.360 கோடி வரை கடன் பெற்றுள்ளது. தற்போது விவசாயிகளுக்கு வங்கிகளிலிருந்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர். இதற்கு வங்கி ஊழியர்களும் ஆலை நிர்வாகத்துக்கு உடந்தையாக செயல்பட்டுள்ளனர். எனவே ஆலை நிர்வாக இயக்குனர், ஆலை அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக எஸ்பி அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Related Stories: