மகசூலை அதிகரிக்க மண்புழு உரம் சாலச்சிறந்தது வேளாண்மை அதிகாரி விளக்கம்

சேதுபாவாசத்திரம், மே 21: விவசாயிகள் அதிக மகசூல் பெற இயற்கை உரங்களில் மண்புழு உரம் பயன்படுத்துவது சாலச்சிறந்தது என சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் சையதுஇப்ராஹிம் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: விவசாயிகள் அதிகமான மகசூலை பெற வேண்டும் என்ற ஆர்வமிகுதியில் அளவுக்கு அதிகமான ரசாயன உரங்களை நிலத்தில் இடுவதால் பல்வேறு விதமான பவுதீக மற்றும் ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டு மண்ணின் தரம் கெட்டுவிடுகிறது. இந்த குறையை போக்கிட மற்றெந்த இயற்கை உரங்களிலும் இல்லா அளவிற்கு பேரூட்டங்களும், நுண்ணூட்டங்களும் மண்புழு உரத்தில் மலிந்து கிடக்கின்றன. நிலத்தின் பாதிப்புகளை குறைத்து, குணங்களை மாற்றி இயற்கையான சத்துக்களை சேர்த்து மகசூலை அதிகரிப்பதுடன் விளைபொருட்களின் சுவை, தரம், எடை முதலியவற்றை அதிகரிக்கச் செய்கிறது.

மேலும், மண்புழு உரம் இடுவதினால் ரசாயன உரம் இடும் அளவினை 30 சதவீதம் வரை குறைத்துக்கொள்ளலாம். தண்ணீரை ஈர்த்து தக்க வைத்துக்கொள்ளும் திறன் அதிகரிப்பதால் 50 சதம் வரை தண்ணீர் பாய்ச்சுவதை குறைத்துக்கொள்ளலாம். தாவரங்களின் வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச்செய்கிறது. மழை வெள்ள காலங்களில் மண் அரிமானத்தை தடுக்கிறது. நிலத்தில் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் செயல்திறனை அதிகரித்து விரைவாக இனப்பெருக்கத்திற்கு வழி வகுக்கிறது. 30 முதல் 120 சதம் வரை மகசூலை அதிகரிப்பதுடன் தானியங்கள், காய்கறிகள், பழவகைகளின் நிறம், சுவை, தரம் மேன்மையடைகிறது. இந்த உரத்தில் 160 சதம் தழைச்சத்து, 0.57 சதம் மணிச்சத்து, 1.04 சதம் சாம்பல் சத்து, 0.38 சதம் கந்தகம், 0.37 சதம் மெக்னீசியம், 0.35 சதம் சுண்ணாம்பு மற்றும் துத்தநாகம், மாங்கனீசு, இரும்பு, தாமிரம், போரான், மாலிப்டினம் ஆகிய சத்துக்கள்நிறைந்து கிடக்கின்றன. இதை நெல் மற்றும் காய் கறி சாகுபடிக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Related Stories: