×

அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் அக்டோபர் 30ம்தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் அறநிலையத்துறை ஆணையர் தகவல்

குளித்தலை, மே21: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரோப்கார் திட்டம் அக்.30ம்தேதி மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என அறநிலையத்துறை ஆணையர்  தெரிவித்தாா். கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த அய்யர்மலையில் உள்ளது சிவதலங்களில் பிரசித்தி பெற்ற 1017 படிகளை கொண்ட ரத்தினகிரீஸ்வரர் கோயில். இக்கோயிலுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து கோயில் குடிபாட்டுக்காரர்கள்  ஆயிரக்க கணக்கானோர் தினந்தோறும் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் குடிபாட்டுக்காரர்கள் வயது முதிர்வின் காரணமாக மலை உச்சிக்கு செல்ல முடியாமல் கீழிருந்த படியே சுவாமி தரிசனம் செய்து வந்தனர்.  இந்நிலை குறித்து பக்தர்களும் குடிபாட்டுக்காரர்களும் அய்யர்மலைக்கு ரோப் கார்திட்டம் கொண்டு வர வேண்டும் என அப்போதைய திமுக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இக்கோரிக்கையை ஏற்ற திமுக அரசு 6 கோடியே 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து 2.2.2011ல் அடிக்கல் நாட்டு விழாவை நடத்தினர். அதன் பிறகு ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 28.3.2017ல் இந்த ரோப் கார் திட்டத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது. அப்போது 30.06.2018க்குள் இப்பணி நிறைவேற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்பிறகு 30.4.2019 வரை நீட்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பணிகள் நடைபெற்று முடிவு பெறாத நிலையில் இருந்து வந்தது.
 இந்நிலையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்த ரெட்டி ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரத்தினகிரிஸ்வரர் மலை உச்சிக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து மலை மேல் இருந்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் கோயில் நிர்வாகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி காமிரா மற்றும் நிர்வாக கோப்புகளையும் ஆய்வு செய்தார். அப்போது வரும் அக்டோபர் 30க்குள் பணி நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரோப் கார் விடப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது  இணை ஆணையர் சுதாகர், கரூர் உதவி ஆணையர் சூரியநாராயணன், செயற்பொறியாளர், உதவிகோட்டப்பொறியாளர், செயல் அலுவலர்கள் இருந்தனர்.

Tags : Ayyarirmai temple ,
× RELATED குளித்தலையில் மாணவரை ஆயுதங்களால் தாக்கிய வாலிபர் கைது