மின்விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கும் அவலம்

காரைக்கால், மே 21:  காரைக்கால் நகர் பகுதியான காத்தாபிள்ளை கோடி சிக்னலில், கடந்த ஒரு வாரமாக மின்விளக்கு இல்லாமல் இருண்டு கிடக்கும் அவலநிலை உள்ளது. இதனை மின்துறை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். காரைக்கால் தேசிய நெடுஞ்சாலையான பாரதியார் சாலை - திருநள்ளாறு சாலை சந்திப்பு என்பது மிக முக்கியமான பகுதி. இங்குதான் அனைத்து பேருந்துகளும் ஒரு வழிப்பாதையில் பிரிகிறது. திருநள்ளாறு சனிபகவான் கோயில், கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி மார்க்கமான அனைத்து பேருந்துகளும் வந்து செல்கிறது. நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் சாலையும் இதுதான். மாவட்டத்தின் மக்கள் கூடும் பிரதான மார்க்கெட் பகுதியும் இங்குதான் உள்ளது. அதனால் இந்த சாலை சந்திப்பில் உள்ள ஹைமாஸ் விளக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. பகல் நேரத்திலேயே இந்த சாலையில் விபத்துகள் அதிகமாக நடக்கும்.

 இந்நிலையில் இங்குள்ள ஹைமாஸ் விளக்கு கடந்த ஒரு வாரமாக எரியவில்லை. நகர்ப்புற நடைபாதை ஆக்கிரமிப்பு பணியால் வணிகர்களும் தங்கள் நிறுவன முகப்பில் இருந்த பெரும்பாலுமான விளக்குகளை அகற்றிவிட்டனர். வாகன வெளிச்சத்தில் மட்டுமே கடந்த ஒரு வாரமாக இந்த பகுதி இயங்கிவரும் அவலநிலையில் உள்ளது. எனவே, காரைக்கால் மாவட்ட மின்துறை போர்க்கால அடிப்படையில் இதை சரி செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து, சமூக ஆர்வலர் இஸ்மாயில் கூறுகையில், நகரின் இதயப்பகுதி காத்தாபிள்ளை கோடிதான். கடந்த ஒரு வாரமாக இங்குள்ள ஹைமாஸ் விளக்கு எரியாததால் மக்கள் பலவித இன்னல்களை சந்தித்து வருகின்றனர். ஏற்கெனவே காரைக்கால் பாரதியார் வீதி, திருநள்ளாறு வீதி, காமராஜர் சாலை, மாதாகோயில் வீதி, பைபாஸ் சாலைகளில் போதுமான மின் விளக்குகள் இல்லாததால் வழிப்பறி, சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், காத்தாபிள்ளை கோடியில் மின்விளக்கு எரியாமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதை மாவட்ட நிர்வாகம் உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: