ரயில் தண்டவாளம் அருகே முட்புதரில் ஆண்குழந்தை வீச்சு

திருபுவனை, மே 21:  கண்டமங்கலம் அருகே பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை முட்புதரில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே ஆழியூர் கிராமத்தை சேர்ந்த கவுசல்யா என்பவர் நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் அருகில் உள்ள ரயில்பாதை வழியாக நடந்து சென்றார். அப்போது அங்குள்ள முட்புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டு அருகில் சென்று பார்த்தார். அங்கு பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அருகில் யாரும் இல்லை. உடனே அவர் இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து குழந்தையை மீட்ட அப்பகுதி மக்கள் கண்டமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையை மீட்டு கண்டமங்கலம் அரசு மருத்துவமனை செவிலியர் பவானியிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து விழுப்புரம் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அக்குழந்தை கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

முட்புதரில் வீசப்பட்ட குழந்தை யாருடையது? அதே பகுதியை சேர்ந்தவர்கள் யாராவது வீசிவிட்டு சென்றார்களா? அல்லது வெளியூரில் இருந்து வந்து வீசிவிட்டு சென்றார்களா? அல்லது ரயிலில் இருந்து தவறி விழுந்ததா? என பல்வேறு கோணங்களில் கண்டமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: