கடைகளை அகற்ற எதிர்ப்பு நடைபாதை வியாபாரிகள் மனு

புதுச்சேரி, மே 21:  புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வரிடம் நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தனர். புதுவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. நகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இத்திட்டத்திற்காக நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகளை அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த புதுச்சேரி நகர நடைபாதை வியாபாரிகள் நலச் சங்கத்தினர், ஏற்கனவே ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டம் பெயரில் நடைபாதை மற்றும் தள்ளுவண்டி கடைகளை அகற்றுவதால் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர்.

Advertising
Advertising

 எங்களது குடும்ப சூழலை கருத்தில் கொண்டு முதல்வர், மீண்டும் அதே இடத்திலே தொடர்ந்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தினர். அவர்களின் கோரிக்கை இதுவரை அரசால் ஏற்கப்படாத நிலையில் நேற்று சங்க கவுரவத் தலைவர்கள் மனோகர், கன்னியப்பன், சட்ட ஆலோசகர் இளையராஜா, தலைவர் தெசிர் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் நடைபாதை வியாபாரிகள் 40க்கும் மேற்பட்டோர் எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள முதல்வர் நாராயணசாமி வீட்டின் முன்பு திரண்டனர். பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு அளிக்க காத்திருந்தனர். இதுபற்றிய தகவல் கிடைத்து அங்கு வந்த முதல்வரை, நடைபாதை வியாபாரிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கை மனுவை வழங்கிய நடைபாதை வியாபாரிகளிடம், இப்பிரச்னை தொடர்பாக கமிஷனரிடம் பேசி விரைவில் தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: