கருத்து கணிப்புகள் நம்ப தகுந்ததாக இல்லை

புதுச்சேரி, மே 21:  இந்தியாவில் உள்ள 80 கோடி வாக்காளர்களில் 5 லட்சம் பேரை வைத்து ஒரு தேர்தலின் முடிவை கணித்துவிட முடியாது. நம் நாட்டில் 90 சதவீதம் கருத்து கணிப்புகள் பொய்த்து போயுள்ளன என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அதன் நினைவாக ஆண்டுதோறும் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து ஐஎன்டியுசி சார்பில் கேரளா, தமிழகம், புதுச்சேரி வழியாக நினைவு ஜோதி ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

 அதன்படி, 28வது நினைவு ஜோதி யாத்திரை, கர்நாடக மாநில தொழிலாளர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரகாசம் தலைமையில் கடந்த 15ம் தேதி பெங்களூருவில் தொடங்கியது. கேரளா, தமிழ்நாடு வழியாக நேற்று இரவு புதுச்சேரிக்கு வந்தது. ஜோதி யாத்திரை குழுவினரை முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரசார் வரவேற்றனர். பின்னர் வழியனுப்பும் நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி சிலை அருகில் நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமை தாங்கினார். முன்னாள் சபாநாயகர் வைத்திலிங்கம், லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஏழுமலை, முன்னாள் எம்எல்ஏ நீல.கங்காதரன், துணை தலைவர் தேவதாஸ், பொதுச்செயலாளர் ஏகேடி.ஆறுமுகம், மகிளா காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 அதன் பின்னர், முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராஜிவ்காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக புதுச்சேரியில் இருந்து காங்கிரஸ் கட்சி தலைவர், தொண்டர்கள் என 250 பேர் 21ம் தேதி(இன்று) ஸ்ரீபெரும்புதூர் செல்கிறோம். இன்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நடைபெறும் அமைதி பேரணியில் நான் கலந்து கொள்கிறேன் என்றார். தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ளது குறித்து முதல்வரிடம் கேட்டதற்கு, நாட்டில் உள்ள 80 கோடி வாக்காளர்களில் 5 லட்சம் பேரை வைத்து ஒரு தேர்தலின் முடிவை கணித்துவிட முடியாது. நம் நாட்டில் 90 சதவீதம் கருத்து கணிப்புகள் பொய்த்து போய் உள்ளன. 2004ல் வாஜ்பாய் மீண்டும் பிரதமராக வருவார் என்று கூறினார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. 2009ல் மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக வரமாட்டார் என்றார்கள். அதுவும் பொய்த்து போய்விட்டது.

 தமிழகத்தை பொறுத்த வரை திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு குறைந்தது 34 இடங்களில் வெற்றி பெறும் என்பது அனைவரது கணிப்பு. நான் தமிழகத்தில் பல இடங்களுக்கு சென்றபோது மக்கள் மத்தியில் எழுச்சி, மோடி எதிர்ப்பு அலை இருந்ததை பார்க்க முடிந்தது. ஆனால், கருத்து கணிப்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணி 27 இடங்களில் தான் வெற்றி பெறும் என கூறியிருக்கிறார்கள். அதேபோல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆனால் ராஜஸ்தானில் 3 இடங்கள், மத்திய பிரதேசத்தில் 5 இடங்கள் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் முதல்வர் தொகுதியிலேயே மூன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்தில் சமாஜ்வாடி கட்சி வெற்றி பெற்றது. ஆனால் கருத்து கணிப்பில் உத்தரபிரசேத்தில் பாஜக 55 இடங்களில் வெற்றி பெறும் என்கிறார்கள்.  

குஜராத்தில் முழுமையாக பாஜக வெல்லும் என கூறுகிறார்கள். ஆனால் குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் 85 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 15 இடங்கள் கிடைக்கும் என்கிறார்கள். இந்த கருத்து கணிப்புகள் நம்ப தகுந்ததாக இல்லை. இதேபோல் பல மாநிலங்களில் நம்ப முடியாத அளவுக்கு கருத்து கணிப்புகள் வந்துள்ளது. இந்த கருத்து கணிப்பை வைத்து எந்த முடிவையும் சொல்ல முடியாது. வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு வருகிற முடிவைதான் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: