புதுச்சேரி தேர்தல் முடிவுகள் உடனே தெரியாது

புதுச்சேரி, மே 21: 150 விவிபாட் இயந்திரங்கள் எண்ணுவதால், இந்தியாவிலே புதுச்சேரி தேர்தல் முடிவுகள் காலதாமதமாக வெளியாகும் என தெரியவந்துள்ளது. புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் மற்றும் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரிகளில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 23 தொகுதிகளின் வாக்குகளும், அதோடு தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் வாக்குகளும் எண்ணப்படுகிறது. இந்த முறை வெற்றிப்பெற்றவர்கள் யார்? என்பதை தேர்தல் ஆணையம் 24ம் தேதிதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் முதன்முறையாக உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தொகுதிக்கு 5 விவிபாட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகை ரசீது சீட்டுகளும் எண்ணப்படுவதால் தேர்தல் முடிவுகள் தெரிந்து கொள்வதில் காலதாமதமாகும் என தெரியவந்துள்ளது. இந்தியாவிலே புதுச்சேரி, சிக்கிம் தொகுதிகளின் முடிவுகள் தெரிந்து கொள்ள நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை இன்னும் 2 நாட்களே மீதமுள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா? என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரி அருண்  நேற்று ஆய்வு செய்தார். மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்டாங் ரூம், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களயும் பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் 23 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி காலை 8 மணிக்கு  முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை துவங்கும். அதன்பிறகு 8.30 மணிக்கு மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுவாரியாக எண்ணப்படும். இதற்காக 2 மையங்களில் 8 உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தலைமையில் வாக்கு எண்ணிக்கையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகும். தொடர்ந்து ஒரு உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு 3 தொகுதிளை கவனிப்பார் என்ற அடிப்படையில்,  மொத்தமாக 15 விவிபாட் இயந்திரங்கள் எண்ணப்பட வேண்டும். ஒரு விவிபாட் எண்ணிக்கை முடிக்க ஒன்றரை மணி நேரமாகும். அதன்படி வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்தாலும், விவிபாட் எண்ணி முடித்தவுடன்தான் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும்.

காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வந்தாலும், அடுத்த முடிவு வெளியாக இரவு 7 மணியாகிவிடும். தொடர்ந்து இதேபோன்று மொத்தமாக 155 விவிபாட்  இயந்திரங்களின் பதிவான ஒப்புகை ரசீதுகள் எண்ணவேண்டும் என்பதால்,  ஒட்டுமொத்தமான முடிவுகளை தெரிந்துகொள்ள அதிகாலை 3 மணியாகிவிடும். யார் வெற்றிப்பெற்றார் என்பதை 23ம் தேதி தெரிந்து கொள்ள முடியாது. 24ம் தேதி காலை 7 மணிக்கு புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி இறுதி முடிவுகள் தெரியவரும். அதே நேரத்தில் தட்டாஞ்சாவடி தொகுதியில் யார்? வெற்றிப்பெற்றது என்ற முடிவு காலை 11 மணிக்கெல்லாம் தெரிந்துவிடும். தமிழகத்தில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. இதனால் அங்கு 30 விவிபாட் இயந்திரங்களின் ரசீதுகளை எண்ணினால் போதும், ஆனால் புதுச்சேரியில் 30 தொகுதிகள் இருப்பதால் 150 விவிபாட் இயந்திரங்களும், எண்ண வேண்டியுள்ளது.

அதேபோன்று ஒரே நேரத்தில் அனைத்து விவிபாட் இயந்திரங்களை கொண்டு வந்து எண்ண முடியாது. ஒன்றன் பின் ஒன்றாக ஸ்டாங் ரூமில் இருந்து கொண்டு வர  காலதாமதம் ஏற்படும். இரவு முழுவதும் இடைவெளி இல்லாமல் இப்பணிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதன்காரணமாக குடிநீர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு உணவு, தங்கும் வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை பணிக்கு வரும் அதிகாரிகள் கார் எடுத்துவரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட அனுமதியில்லை. செல்போனில் படம் எடுக்க தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: