திருமண சீர்வரிசை தராததால் விவசாயி மீது சரமாரி தாக்குதல்

விருத்தாசலம், மே 21: விருத்தாசலம் அருகே தந்தை திருமண சீர்வரிசை தராததால் அவரை தாக்கிய மகள், கணவருடன் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகேயுள்ள தீவளூர் கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (69), விவசாயி. இவருக்கு 4 பெண் பிள்ளைகள் உள்ளனர். அதில் 3 பேருக்கு திருமணமாகி விட்டது. நான்காவது மகள் பிரியா (25) அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன் (34) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அதனை சாமிநாதன் ஏற்காமல் திருமணத்துக்கு செய்ய வேண்டிய எந்த சீர்வரிசையும் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் தனது மனைவி பிரியாவுடன் சென்று மாமனார் சாமிநாதனிடம் தன் மனைவிக்கு செய்ய வேண்டிய சீர்வரிசையை செய்யும்படி கேட்டு தகராறு செய்துள்ளார்.

Advertising
Advertising

அப்போது ஏற்பட்ட தகராறில் வேல்முருகன், பிரியா மற்றும் வேல்முருகனின் தாய் மூக்காயி ஆகிய 3 பேரும் சேர்ந்து சாமிநாதனை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த சாமிநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து சாமிநாதன் கொடுத்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார், வேல்முருகன் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப்பதிந்து வேல்முருகன், அவரது மனைவி பிரியா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: