×

கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்

திண்டிவனம்,மே  20: திண்டிவனத்தில் புதுச்சேரி சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மற்றும் எப்.சி வாகனங்கள் வருகின்றன. எப்.சிக்காக வரும் வாகனங்கள் புகை பரிசோதனை செய்து கொண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு செல்ல வேண்டும். இதனால் திண்டிவனம் புதுச்சேரி சாலையில் தீயணைப்பு நிலையம் எதிரே தனியார் புகை பரிசோதனை நிலையம் உள்ளது. இந்த பரிசோதனை நிலையத்திற்கு வரும் கனரக வாகனங்கள் திண்டிவனம் புதுச்சேரி சாலையில் அணிவகுத்து நீண்ட நேரம் இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஆகையால் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே புகை பரிசோதனை நிலையம் அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை திருக்கோவிலூர், மே 21: திருக்கோவிலூர் அரசு தலைமை மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லாததால் உரிய சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள், கர்ப்பிணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். திருக்கோவிலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு திருக்கோவிலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும், சங்கராபுரம், கண்டாச்சிபுரம், செஞ்சி, உளுந்தூர்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர். தினமும் ஆயிரத்து 200க்கும் மேற்பட்டவர்கள் புறநோயாளிகளாகவும், 100க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சைக்காக வருகின்றனர்.

ஆனால் நோயாளிகளின் வருகைக்கேற்றபடி போதிய மருத்துவர்கள் இங்கு இல்லை. மொத்தமுள்ள 23 உதவி மருத்துவர்கள் பணியிடத்தில் 3 பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாகவே உள்ளது. இதில் இங்கு பணிபுரியும் சுமார் 10 மருத்துவர்கள் டைவர்ஷன் என்ற அடிப்படையில் திண்டிவனம், கள்ளக்குறிச்சி போன்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறி டைவர்ஷன் செய்து வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதோடு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றாலோ, அவசர சிகிச்சை மேற்கொள்ளவோ இங்கு பொது அறுவை சிகிச்சை நிபுணர், மயக்கவியல் நிபுணர், முதுநிலை பொதுநல மருத்துவர்(மருந்தியல்) மற்றும் முதுநிலை குழந்தைகள் மருத்துவ நிபுணர், முதுநிலை மகப்பேறு நிபுணர்கள் இன்னும் நியமிக்கப்படவில்லை.

இதனால் இப்பகுதியில் உள்ள ஏழை எளிய நோயாளிகளை உயர்சிகிச்சைக்காக திருவண்ணாமலை, விழுப்புரம், புதுவை, சென்னை போன்ற பகுதிகளுக்கு அழைத்துச்செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை 24மணிநேரமும் பிரசவம் மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கான சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளதே தவிர அது பெயரளவிற்குதான் இயங்கி வருகிறது. இப்பிரிவுக்கு 6மகப்பேறு மருத்துவர்கள், 3குழந்தைகள் மருத்துவர்கள், 3மயக்க மருந்து மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் அந்த பிரிவுக்கு மருத்துவர்கள் யாரும் இல்லை. பெயரளவிற்குதான் இந்த பிரிவு செயல்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலேயே தாலுகா அளவிலான மருத்துவமனையில் சாதாரண பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம் அதிகப்படியாக நடந்ததால் இந்த மருத்துவமனைக்கும், இங்கு பணிபுரிந்த மருத்துவர்களுக்கும் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பரிசு மற்றும் பாராட்டு சான்றும் வழங்கப்பட்டது.

ஆனால் அதிகாரிகள் இந்த மருத்துவமனையை தரம் உயர்த்தும் நடவடிக்கையை பின்னுக்கு தள்ளி வருவதாக நோயாளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடத்தை நிரப்புவதுடன் டைவர்ஷன் அடிப்படையில் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட மருத்துவர்களை மீண்டும் இங்கேயே பணியமர்த்த வேண்டும். முடக்கப்பட்டுள்ள 24மணிநேர பிரசவ கண்காணிப்பு பிரிவை செயல்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை