60 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்:₹3200 அபராதம்

சின்னசேலம், மே 21: வடக்கநந்தல் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்த அதிகாரிகள் 60கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, ரூ.3200 அபராதம் விதித்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தினால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் பருவமழை பெய்யாததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பொழிவு காலத்தில் நிலத்தின் மேல்மட்டத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் படர்ந்து இருப்பதால் மழைநீர் சேமிக்கப்படாமல் வீணாகிறது. இதையடுத்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த அரசு தடைவிதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு கடந்த 3 மாதங்களுக்கு மேலாக அமலில் உள்ளது.  இருப்பினும் ஒரு சில கடைகளில் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதாக புகார் வருவதையடுத்து கலெக்டர் சுப்ரமணியன் உத்தரவு படி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தல், அபராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையில் சின்னசேலம், வடக்கநந்தல் பேரூராட்சி அலுவலர்கள்  ஈடுபட்டு வருகின்றனர்.

Advertising
Advertising

இதையடுத்து வடக்கநந்தல் பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகம் உத்தரவின்பேரில், தலைமை எழுத்தர் முத்து மேற்பார்வையில் துப்புரவு மேற்பார்வையாளர் ராஜா மற்றும் துப்புரவு பணியாளர்கள் கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள கடைகள், துணி கடைகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் நேற்று காலை முதல் சோதனை செய்தனர். இதில் 60கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் இருந்து ரூ.3200 அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து செயல் அலுவலர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடக்கநந்தல் பேரூராட்சி நிர்வாகம் தொடர் சோதனை நடத்தி வருகிறது. இருப்பினும் கச்சிராயபாளையம் பகுதியில்  உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக தெரிகிறது. இது அரசு சட்டத்திற்கு எதிர்மறையாக உள்ளது. இவ்வாறு தொடர்ந்து பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கடைக்கு சீல் வைக்க கலெக்டரிடம் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: