குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம், மே 21: விழுப்புரம் மற்றும் வானூர் பகுதிகளில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு பேருந்துகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் அருகே 42வது வார்டு பானாம்பட்டு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு தண்ணீரை நிரப்பும் மின் மோட்டார் கடந்த ஒரு வாரத்திற்கு முன் திடீரென பழுதானது. அந்த மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்யாததால் கடந்த ஒரு வாரகாலமாக மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் தண்ணீரை ஏற்ற முடியவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் முறையிட்ட பிறகும், பழுதான மின் மோட்டாரை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் நீண்டதூரம் நடந்து சென்று வயல்வெளி பகுதிகளில் தண்ணீர் பிடித்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று பானாம்பட்டு மெயின்ரோட்டுக்கு காலி குடங்களுடன் திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும் அந்த வழியாக பில்லூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற அரசு டவுன் பஸ்சையும் பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக விழுப்புரம்-பில்லூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பழுதான மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்து குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையேற்று பொதுமக்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

வானூர்:  விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா உப்புவேலூர் அருகே உள்ளது கொமடிப்பட்டு கிராமம். இங்கு 130 குடும்பங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்ய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக மின்வினியோகம் சீராக இல்லாத காரணத்தால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் ஏற்ற முடியவில்லை. இதனால் குடிநீர் சப்ளை தடைபட்டது. இதனை கண்டித்து நேற்று காலை கொமடிப்பட்டில் இருந்து காரட்டை செல்லும் சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்தையும் சிறைபிடித்தனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கிளியனூர் போலீசார் மற்றும் வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சம்பந்தம், தேவராஜ் ஆகியோர் விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தங்கு தடையின்றி குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: