×

கூடலையாத்தூர்-அகரஆலம்பாடி இடையே தரைப்பாலம் அமைக்க வேண்டும்

முஷ்ணம், மே 21: முஷ்ணம் அருகே கூடலையாத்தூர்-அகரஆலம்பாடி இடையே தரைப்பாலம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடலூர் மாவட்டம் முஷ்ணம் அருகே கூடலையாத்தூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு வெள்ளாறு, மணிமுக்தாறு ஆகியன ஒன்று கூடுகின்றன. இந்த ஆற்றின் மறுகரையில் அகரஆலம்பாடி, ஆதனூர், ஒட்டிமேடு, பெருந்துறை, சின்னகோட்டிமலை, பெரியகோட்டிமலை என பல்வேறு கிராமங்கள் அமைந்துள்ளது. இப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோர் முஷ்ணம், ஜெயங்கொண்டம், சோழத்தரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமாயின் இந்த ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். இல்லையெனில் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றித்தான் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு செல்ல முடியும். மழை, வெயில் காலங்களிலும் ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டியுள்ளது. கூடலையாத்தூரில் வசிக்கும் சிலரது நிலங்கள் மறுகரையில் உள்ளது. இதனால் அறுவடை காலங்களில் இந்த ஆற்றை கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இப்பகுதி மக்களின் வசதிக்கு ஏற்ப இப்பகுதியில் தரைப்பாலம் அமைத்தால் மிகவும் எளிதாக இருக்கும் என இருகிராம மக்கள் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகளும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kayalaiyattur -Agaraallambadi ,
× RELATED திண்டிவனத்தில் 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்