×

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் மீண்டும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை, அதிகாரிகள் எச்சரிக்கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த 6 பெண்கள்

திருவண்ணாமலை, மே 21: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்த 6 பெண்களிடம் விசாரணை நடத்தி இது போன்ற செயல்களில் மீண்டும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். திருவண்ணாமலையில் வைகாசி மாத பவுர்ணமியையொட்டி கடந்த 18ம் தேதி கிரிவலப்பாதையில் சில பெண்கள் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்துள்ளனர். இது குறித்து கலெக்டர் கே.எஸ்.கந்தசாமிக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் இது குறித்து உடனடியாக ஆய்வு மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவல பணியாளர்கள் கிரிவலப்பாதையில் ஆய்வு செய்தனர். அப்போது, எமலிங்கம், ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 6 பெண்கள் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர்கள் 6 பேரிடமிருந்து கை குழந்தைகளை மீட்டு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைத்தனர். மேலும், இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் 6 பெண்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், இவர்கள் அனைவரும் அய்யம்பாளையம் புதூர் கிராமத்தை சேர்ந்த, குடுகுடுப்பைகாரர்கள் என்பதும், இவர்கள் வறுமையின் காரணமாக வேறு வழியின்றி தங்களது குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இது தவறான செயல், இது போன்ற செயல்களில் இனி குழந்தைகளை வைத்து ஈடுபட கூடாது என கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர், குழந்தைகள் காப்ப அலுவலகத்திற்கு சென்ற 6 பெண்களும், அலுவலரிடம் தங்கள் குழந்தைகளை ஒப்படைக்கும்படி கேட்டனர். அப்போது, இனி இதுபோன்ற செயல்களில் குழந்தைகளை ஈடுபடுத்த மாட்டோம் என எழுத்து பூர்வமாக எழுதி பெற்றுக்கொண்டு, குழந்தைகளை ஒப்படைத்தனர். இனி இதுபோன்ற செயல்களில் குழந்தைகளுடன் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பிவைக்கப்பட்டதாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா தெரிவித்தார்.

Tags : women ,children ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது