×

பிராய்லர் இறைச்சி கோழி நல்லது பொய் வதந்திகளை நம்ப வேண்டாம் பல்கலைக்கழக பயிற்சி மைய தலைவர் பேட்டி

திருவண்ணாமலை, மே 21: பிராய்லர் இறைச்சி கோழி நல்லது தான். பொய் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய தலைவர் கூறியள்ளார். திருவண்ணாமலையில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவரும், இணை பேராசிரியருமான தியோபிலஸ் ஆனந்த்குமார் நேற்று நிருபரிடம் கூறியதாவது: ‘கோடை விடுமுறை வந்து விட்டால் பலர் உறவினர்களுக்கும், குழந்தைகளுக்கும் கோழி கறி சமைத்து தர விரும்புவார்கள். ஆனால் பிராய்லர் கோழி பற்றிய பல புரளிகளால் அவற்றை வாங்க சிலர் யோசிக்கின்றனர். குறிப்பாக பிராய்லர் வளர்ப்பில் ஹார்மோன் ஊசி போடுவதாகவும், இதனால் கோழி இறைச்சியை சாப்பிடும் பெண் குழந்தைகள் விரைவில் பருவமடைகிறார்கள் என்றும், ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுகிறது என்றும், மேலும் உடல்பருமன் ஆகி விடுகிறது என்றும் வதந்திகள் பரப்புகின்றன.

கோழிகளில் வளர்ச்சி ஊக்கியாக ஹார்மோன் அல்லது ஸ்டீராய்டு கோழிகளுக்கு ஊசியாக தரப்படுகிறது என்பது ஒரு வடிகட்டிய பொய்யாகும். உலகில் எந்த ஒரு நாட்டிலும் இப்படி செய்வதில்லை. மேலும் இப்படி செய்ததாக இதுவரை யாரும் அகப்பட்டதாகவும் இலலை. ஹார்மோன்களின் விலை மிக அதிகம். எனவே அவற்றை உபயோகித்து இன்றைய மலிவான விலைக்கு கோழியை விற்பதும் சாத்தியம் இல்லை. ஆகவே நுகர்வோர் எந்த பயமும் இல்லாமல் பிராய்லர் கோழி இறைச்சியை சாப்பிடலாம் என்பது அறிவியல் பூர்வமான உண்மையாகும். இன்றைய கால கட்டத்தில் ஏழைகளுக்கு மிக மலிவான விலங்கின புரதமாக பிராய்லர் இறைச்சி இருக்கிறது. மற்றவை கூடுதல் விலை கொடுத்தால் மட்டுமே வாங்க இயலும். சமூக வலைத்தளங்களில், இக்கோழி வளர்ப்பில் செய்யப்படும் சில பராமரிப்பு முறைகள் புரியாமலும், பிராய்லர் கோழியின் சிறப்பு தன்மை பற்றி அறியாமலும் தவறான கருத்துக்களை பரிமாறுகின்றனர்.

சிறப்பு தன்மை குறிப்பாக என்னவெனில் இவ்வகை பிராய்லர் கோழிகள் அதிக தீவன மாற்றுத்திறன் கொண்டுள்ளவை. ஆனால் குறைந்த நோய் எதிர்ப்பு தன்மை உடையவை. எனவே அட்டவணைப்படி சில நோய்களுக்கு தடுப்பு ஊசி குத்தப்படுகிறது. இதையே தவறாக ஹார்மோன் ஊசி குத்துவதாக கூறுகின்றனர். எனவே இன்றைய தலைமுறை குழந்தைகள் அதிக எண்ணெய் அடங்கிய நொறுக்குத்தீனியை உண்பதும், அதற்கு ஏற்ப உடற்பயிற்சி செய்யாதது, அலைபேசிக்கும், தொலைக்காட்சிக்கும் அதிக நேரம் செலவிடுவதும் போன்றவையே உடல்பருமன், மிக இளவயதில் பருவமடைதல் போன்றவற்றுக்கு முக்கிய காரணம். இறைச்சி வகைகளை எண்ணெய்யில் பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து வேகவைத்து சாப்பிட்டால் உடல் நலத்துக்கு நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED திமுக ஒன்றிய செயலாளர், அதிமுக மாவட்ட...