×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நூறு நாள் வேலைத்திட்ட நேரத்தை மாற்ற வேண்டும் குடை பிடித்தபடி விவசாயிகள் நூதன போராட்டம்

திருவண்ணாமலை, மே 21: திருவண்ணாமலையில், கடும் கோடை வெயிலில் தொழிலாளர்கள் பாதிப்பால், நூறு நாள் வேலைத்திட்ட நேரத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி விவசாயிகள் குடை பிடித்தபடி கலெக்டர் அலுவலகம் முன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை, கலெக்டர் அலுவலகம் முன் நூறு நாள் வேலைத்திட்ட உழவர் பேரவை சார்பில் குடை பிடித்தபடி நூதன போராட்டம் நடந்தது. இதில், உழவர் பேரவையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சிவக்குமார், துரைசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக கடும் கோடை வெயில் சுட்டெரிப்பதால், நூறு நாள் வேலைத்திட்டத்தில் தொழிலாளர்கள் பணிபுரியும் நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர். முன்னதாக, நூறு நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்யும் போது, வெயில் கொடுமையால் உயிரிழந்த செய்யாறு பகுதியைச் சேர்ந்த சரோஜாவின் மறைவுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரும், வெயில் கொடுமையால் தொழிலாளர்கள் தவிப்பதை அரசுக்கு உணர்த்தும் வகையில், குடை பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத்தொடர்ந்து, தங்களுடைய கோரிக்கை மனுவை, கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகார் பெட்டியில் செலுத்தினர். இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில், 108 டிகிரி வெயில் சுட்டெரிக்கிறது. பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம் என டாக்டர்கள் சொல்கிறார்கள். ஆனால், நூறு நாள் வேலைத்திட்டத்தில் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வேலை செய்யும் நிலை உள்ளது. எனவே, கோடை காலம் முடியும் வரை, காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை என வேலை நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும். வேலையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, நீரிழப்பை தடுக்கும் வகையில் உப்பு, சர்க்கரை கரைசல் வழங்க வேண்டும். மேலும், வறட்சி காரணமாக விவசாய வேலை இல்லை. எனவே, நூறு நாள் வேலையை ஆண்டுக்கு 150 நாட்களாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றார்.

Tags : Thiruvannamalai Collector ,office ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...