×

திருப்பத்தூர், சோளிங்கர் அருகே பரபரப்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோயிலில் உண்ணாவிரதம் பிடிஓ சமரசம்

திருப்பத்தூர், மே 21: திருப்பத்தூர் அடுத்த ப.முத்தம்பட்டியில் குடிநீர் வழங்ககோரி கோயிலில் உண்ணாவிரதம் இருந்த பொதுமக்களிடம் பிடிஓ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். திருப்பத்தூர் அடுத்த கந்திலி ஊராட்சியில் ப.முத்தம்பட்டி ஊராட்சி உள்ளது. இதில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக போர்வெல் பழுதானதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யாததால் கம்பளிகுப்பம், சீரங்கப்பட்டி கிராமங்களில் தலையில் சுமந்து வந்து பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து, அப்பகுதி பொதுமக்கள் கந்திலி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி செயலாளர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லயாம். இதையடுத்து, நேற்று மதியம் திடீரென அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு அங்குள்ள மாரியம்மன் கோவிலில் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

இதுதொடர்பாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி பிடிஓ தயாளன் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பேரில், பொதுமக்கள் உண்ணாவிரதத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதி 1 மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது. சோளிங்கர்: சோளிங்கர் பேரூராட்சி 6வது வார்டு உட்பட்ட பெஸ்டவ தெரு, தர்மா ரெட்டி தெரு, அர்ஜுனா ரெட்டி தெரு ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக சரியான முறையில் குடிநீர் விநியோகம் செய்யவில்லையாம். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் சோளிங்கர் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் சித்தூர்- திருத்தணி சாலையில் வெங்கட்ராய பிள்ளை தெரு அருகே மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த சோளிங்கர் சப்-இன்ஸ்பெக்டர் பஷீர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் பேரூராட்சி செயல் அலுவலர் நேரில் வந்து குடிநீர் வழங்குவதாக உறுதி அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என தெரிவித்தனர். இதையடுத்து, பேரூராட்சி இளநிலை உதவியாளர் எபினேசன், துப்புரவு ஆய்வாளர் வடிவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் நிலத்தடி நீர் குறைந்து விட்டதால் போதுமான குடிநீர் வழங்க முடியவில்லை. இருப்பினும் ஆழ்துளை கிணறுகளை ஆழப்படுத்தி உடனடியாக இப்பகுதிக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, சாலை மறியலை கைவிட்டு அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Tirupattur ,
× RELATED மண்டைய உடைக்குறாங்க… மரியாதை கொடுக்க...