×

வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாட்ஸ்அப் வைரல் வீடியோவால் பரபரப்பு

வாணியம்பாடி, மே 21: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் செவிலியர்கள், உதவியாளர்கள் லஞ்சம் கேட்டு பணம் பெறும் வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் அரசு மருத்துவமனை உள்ளது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் நாள்தோறும் சிகிச்சை பெற வருகின்றனர். பலர் உள்நோயாளிகளாகவும் உள்ளனர். இவ்வாறு சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் அங்கு பணி புரியும் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அசின்தாஜ் என்பவர் நேற்று முன்தினம் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், டிரிப்ஸ் போடும்படி பரிந்துரை செய்தனர். ஆனால், அங்கு பணி புரியும் செவிலியர்கள் டிரிப்ஸ் போட ₹200 தர வேண்டும் என்று கேட்டனர்.

அதன்படி, பணத்தை அசின்தாஜின் உறவினர் தருவதும் இந்த பணத்தை உதவியாளர் ஒருவர் பெறுவது போன்றும் வீடியோ காட்சிகள் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் வாட்ஸ் அப்பில் வேகமாக பரவியது. இதுகுறித்து, நோயாளியின் உறவினர் வாணியம்பாடி மருத்துவ அலுவலரிடம் புகார் தெரிவித்தார். ஆனால், அதன்மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் அளித்தவர்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க லஞ்சம் வாங்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vaniyampadi ,government hospital ,
× RELATED நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி