×

2வது திருமணத்தை தட்டிக்கேட்டு எதிர்ப்பதால் வனச்சரகர் கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையென கதறல்

 வேலூர், 21: 2வது திருமணத்தை தட்டிக்கேட்டு எதிர்ப்பதால் வனச்சரகர் கொலை மிரட்டல் விடுப்பதாக வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனைவி தர்ணாவில் ஈடுபட்டு பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த புங்கனூரை சேர்ந்தவர் மெர்லின்மாலதி(38). இவர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மதியம் வந்தார். பின்னர் கலெக்டர் அலுவலக போர்டிகோவில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். அவரை போலீசார் சமாதானம் செய்தனர். இதையடுத்து அவர் கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் ராஜா அமிர்தி வனச்சரகத்தில் பணியாற்றி வந்தார். லஞ்ச புகாரில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் எனக்கு தெரியாமல் ஆற்காட்டில் ஒரு பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வருகிறார். தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தேன். ஆனால் எனது கணவர் விசாரணைக்கு வரவில்லை. ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக சென்ற என்னை, அடியாட்களை வைத்து புகாரை வாபஸ் பெறும்படி மிரட்டல் விடுக்கிறார். பின்னர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தேன். அவர்கள் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்போதுகூட அவர் விசாரணைக்கு வரவில்லை.
தொடர்ந்து வனத்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் என மாறி, மாறி புகார் செய்தும், அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் செய்கின்றனர். புகாரை விசாரிக்கவில்லை.

இந்நிலையில் நேற்று (நேற்றுமுன்தினம்) எனது மூத்த மகனை அடித்து கடத்திசென்றனர். அவன் தப்பி வந்து விட்டான். எனவே எனது கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது. அப்போது இதேபோல் ஏற்கனவே கலெக்டர், எஸ்பி அலுவலகம் என்று பல முறை புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனால் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Tags : collector ,office ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...