குடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீச்சு: நகை பட்டறை ஊழியர் கைது

அண்ணாநகர்: குடிபோதையில் தகராறு செய்த 8 பேர் மீது அமிலம் வீசியவரை போலீசார் கைது செய்தனர். சென்னை நெற்குன்றம் முனியப்ப நகர் 3வது தெருவில் வாடகை வீட்டில் வசிப்பவர் கன்னியப்பன். இவர், நகை பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் 3வது மாடியில் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அழகுமுத்து (38), கருப்பசாமி (32), வாஞ்சிநாதன் (18), வீரமணி (21), முருகன் (23) உள்பட 8 பேர் வசிக்கின்றனர். இவர்கள், நேற்று முன்தினம் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்கள் சத்தத்துடன் பாட்டு பாடியபடி ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

Advertising
Advertising

இது, கன்னியப்பனுக்கு தொந்தரவாக இருந்ததால், மாடிக்கு சென்று அவர்களை தட்டிக்கேட்டுள்ளார். இதனால், அவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, 8 பேரும் சேர்ந்து கன்னியப்பனை தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற அவரது மனைவியையும் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கன்னியப்பன் வீட்டில் கழிவறைக்கு பயன்படுத்தும் அமிலத்தை கொண்டு வந்து, 8 பேர் மீதும் ஊற்றியுள்ளார். இதில் பலத்தகாயமடைந்த 8 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கன்னியப்பனை நேற்று கைது செய்தனர்.

Related Stories: