மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வீடு வீடாக சென்று விழிப்புணர்வு: அதிகாரிகள் திட்டம்

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், முதன்முறையாக பள்ளிகளில் உள்ள வசதிகளை விளக்கி துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யவும் முடிவு செய்துள்ளனர். சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் மொத்தம் 281 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 32 மேல்நிலைப் பள்ளிகள், 37 உயர்நிலைப் பள்ளிகள், 93 நடுநிலைப் பள்ளிகள், 119 தொடக்கப் பள்ளிகள் அடங்கும். இந்த பள்ளிகளில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி வழங்கப்படுகிறது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் அனைத்து சலுகைகளையும் சேர்த்து கூடுதலாக பல சலுகைகள் மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. குறிப்பாக 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் உயர்கல்வி பயில உதவித் தொகை, முழு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ரூ.1500 பரித்தொகை, மாலை நேர பயிற்சி வகுப்பில் சுண்டல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மொத்தம் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயிலும் வகையில் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆனால் தற்போது 85 ஆயிரம் மாணவ, மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை மேம்படுத்தவும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த  ஆலோசனைக் கூட்டம் ஆணையர் பிரகாஷ் தலைமையில் சமீபத்தில் நடந்தது. அதில் கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர் மற்றும் தலைமையாசிரியர்கள் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைத்து செயல்பட வேண்டும் என்று ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி துணை ஆணையாளர் (கல்வி) குமாரவேல் பாண்டியன், கல்வி அலுவலர் கோவிந்தசாமி, கூடுதல் கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர், தலைமையாசியர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு மாநகராட்சி பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கப்படுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

அதன் அடிப்படையில் வீடு வீடாக சென்று பெற்றோர்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு பள்ளி தலைமையாசிரியரும் அந்த பள்ளியை சுற்றி 1.5 கிலோ மீட்டர் அளவிலான பகுதியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன்படி 1.5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள தெருக்களை கணக்கெடுக்க வேண்டும். ஒரு தெருவுக்கு ஒரு ஆசிரியரை நியமிக்க வேண்டும். அந்த ஆசிரியர் வீடு வீடாக சென்று அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

அதில் பள்ளி செல்லாத குழந்தைகள் மற்றும் இடையில் நின்ற குழந்தைகள் இருந்தால் அவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்க வேண்டும்.

 மேலும் அவர்களிடம்   மாநகராட்சி பள்ளிகளில் என்னென்ன வசதிகள் செய்து தரப்படுகிறது என்பது தொடர்பாக விளக்க வேண்டும். இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை மாநகராட்சி பள்ளிகளில் சேர ஊக்கப்படுத்த வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு பள்ளி தலைமையாசியரும் அந்த பள்ளியை சுற்றியுள்ள இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமையாசியர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை பள்ளிகளில் 85 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதை 1 லட்சத்து 30 ஆயிரமாக உயர்த்துவது எங்களின் நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.

முதல் முறையாக துண்டு பிரசுரம்

இந்த ஆண்டு முதல் முறையாக மாநகராட்சி பள்ளியின் சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்படவுள்ளது. தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி என்று 4 வகையாக இந்த துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 40 ஆயிரம் துண்டு பிரசுரங்கள் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த பிரசுரங்கள் அனைத்தும் பெற்றோர்களுக்கு விநியோகம் செய்யப்படவுள்ளது.

Related Stories: