கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிணறை மக்களே தூர்வாரினர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் அதிரடி

புழல்: சோழவரம் அருகே கடும் குடிநீர் பஞ்சம் காரணமாக, பராமரிக்கப்படாமல் கிடந்த நூற்றாண்டு பழமையான கிணறை பொதுமக்களே தூர்வாரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். புழல் அடுத்த சோழவரம் ஒன்றியம், அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட எடப்பாளையம் கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள தில்லையாடி வள்ளியம்மை தெருவில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட 15 அடி அகலம், 40 அடி ஆழம் கொண்ட கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரை, பல ஆண்டுகளாக கிராம மக்கள் குடிப்பதற்கு பயன்படுத்தி வந்தனர் காலப்போக்கில் இந்த கிணற்றை அதிகாரிகள் சரிவர பராமரிக்காமல் விட்டதால் கிணற்று தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் குப்பை, கழிவுகளை கொட்டியதால் கிணறு தூர்ந்து மாசடைந்து காணப்பட்டது.

இப்பகுதி மக்களுக்கு தற்போது பொது குழாய்கள்  மூலம் ஊராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கி வருகிறது. ஆனால், கோடை காலம்  என்பதால், சமீப காலமாக போதிய குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். எனவே, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க இங்குள்ள பழமைவாய்ந்த கிணற்றை தூர்வார வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அதிகாரிகள் மீது நம்பிக்கை இழந்த இப்பகுதி மக்கள், கிணற்றை தூர்வாரி சீரமைக்க தாங்களே முன்வந்தனர்.

இதையடுத்து, பொக்லைன் இயந்திர உதவியுடன் கிணற்றை தூர்வாரும் பணியை தொடங்கினர். கிணற்றில் பத்து அடிக்கும் மேலாக பிளாஸ்டிக் கழிவுகள் நிரம்பி உள்ளதால், இதை ஆட்கள் மற்றும் இயந்திரம் மூலம் தூர்வாரி குப்பையை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி முடிந்ததும் தண்ணீர் ஊற்று வரும் என்ற நம்பிக்கையோடு பணியை துவங்கியுள்ளதாகவும், தண்ணீர் வந்தால் இப்பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு பயன்படும் எனவும் மக்கள் தெரிவித்தனர்.

Related Stories: