பொதுப்பணித்துறை பாராமுகத்தால் தூர்வாராமல் வறண்ட கடப்பாக்கம் ஏரி: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: மணலி மண்டலத்திற்கு உட்பட்ட ஆண்டார்குப்பம் அருகே கடப்பாக்கம் ஏரி, பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. சுமார் 170 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி நீர், ஒரு காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீராகவும், சுற்றுப் பகுதி வீடுகளில் நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கியது. மேலும், இந்த ஏரி நீரை பயன்படுத்தி சுற்று வட்டாரத்தில் உள்ள விளை நிலங்களில் வாழை, தர்பூசணி, வேர்கடலை, நெல் போன்றவை பயிரிடப்பட்டு வந்தது. இந்நிலையில், பருவ மழை பொய்த்ததாலும் தற்போது ஏரி வறண்டு கிடக்கிறது. விவசாய நிலங்களுக்கு நீர் வசதி இல்லாததோடு ஆடு, மாடு போன்ற கால்நடைகளும் நீரின்றி தவிக்கின்றன. அதுமட்டுமின்றி, இந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டதால் பொதுமக்களின் அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான நீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளாக இந்த ஏரியை பொதுப்பணித்துறை அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் தூர்ந்துள்ளது. இதை தூர்வாரி சீரமைத்தால் மழைக்காலத்தில் நீர் தேங்கும் என்று பலமுறை மனு கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மழைக்காலங்களில் மழைநீர் சேமிக்க முடியாத நிலை உள்ளது. ஏரி, குளங்களை பாதுகாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. நீர்நிலைகளின் அவசியத்தை உலக நாடுகள் உணர்ந்துள்ளன. மக்களும், பொதுநல அமைப்புகளும் உணர்ந்து இதற்காக குரல் கொடுக்கின்றனர். ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் இதற்கு நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே இனியாவது இந்த ஏரியை தூர்வாரி சீரமைத்தால் வருங்கால சந்ததியினருக்கு நீர் ஆதாரம் கிடைக்கும்,’’ என்றனர்.

நிலத்தடி நீர் திருட்டு

சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், கடப்பாக்கம் ஏரியை ஒட்டியுள்ள பகுதியில் ஒரு சிலர் முறையான அனுமதியின்றி ஆழ்துளை கிணறு அமைத்து, ராட்சத மோட்டார் மூலம் நிலத்தடி நீரை திருட்டுத்தனமாக உறிஞ்சி லாரியில் நிரப்பி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல், திருமண மண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அதிக விலைக்கு விற்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது. நிலத்தடி நீரை திருடக் கூடாது என்று நீதிமன்றமே தடை விதித்துள்ளது. ஆனால் அந்தத் தடையை பொருட்படுத்தாமல் சிலர் இங்கு நிலத்தடி நீரை திருடுகின்றனர். இதற்கு வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர், என்றார்.

Related Stories: