பட்டப்பகலில் பெண்ணிடம் செயின் பறிப்பு வடமாநில கொள்ளை கும்பல் சென்னையில் மீண்டும் ஊடுருவல்: ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசுக்கு மக்கள் கோரிக்கை

சென்னை: பட்டப்பகலில் பெண்ணிடம் 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிக்க முயன்ற வடமாநில கொள்ளையனை, 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று கட்டிட தொழிலாளிகள் பிடித்த சம்பவம் கே.கே. நகரில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னையில் வடமாநில கொள்ளையர்கள் சில மாதங்களுக்கு முன்பு விமானத்தில் வந்து மாநகரம் முழுவதும் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து காலை மற்றும் மாலை நேரங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தனர். இவர்களை பிடிக்க 12 காவல் மாவட்டம் வாரியாக துணை கமிஷனர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைத்து கூண்டோடு கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 600க்கும் மேற்பட்ட சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தனிப்படை போலீசார் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொள்ளையர்களின் கிராமத்திற்கு ெசன்று துப்பாக்கி முனைவில் அவர்களை கைது செய்து வந்தனர். அதை தொடர்ந்து சென்னையில் வடமாநில கொள்ளையர்களின் நடமாட்டம் குறைந்து இருந்தது.

சென்னை போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் பதவியேற்ற பிறகு வடமாநில கொள்ளையர்களை கட்டுப்படுத்தினார். அதைதொடர்ந்து இனி இதுபோன்ற வழிப்பறி சம்பவங்கள் சென்னையில் நடைபெறாமல் தடுக்கும் வகையில் சென்னை மாநகரம் முழுவதும் ‘மூன்றாவது கண்’ என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி 50 மீட்டர் தொலைவுக்கு ஒரு சிசிடிவி கேமரா என 2.5 லட்சம் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒருபுறம் சிசிடிவி கேமராக்கள் அமைத்திருந்தாலும், சிசிடிவி கேமராக்கள் செயல்படாத பகுதிகளை குறிவைத்து கொள்ளையர்கள் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கே.கே.நகர் ராணி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்யும் பூங்கொடி (40) என்பவர், நேற்று காலை பணிக்கு செல்ல கே.கே.நகர் பி.டி.ராஜன் சாலையில் பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்து சென்றார். அப்போது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த 2 பேர், பூங்கொடியிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்து இருந்த 5 சவரன் செயினை பறித்து கொண்டு தப்பிக்க முயன்றனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பூங்கொடி, திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அப்ேபாது, அந்த வழியாக வந்த வில்லிவாக்கத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் மணிகண்டன் மற்றும் கவுதம் ஆகியோர் வழிப்பறி கொள்ளையர்களை 2 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். அப்போது, கொள்ளையர்கள் அவர்கள் அணிந்து இருந்த தலைக்கவசத்தால் பிடிக்க வந்த இருவரையும் தாக்கி விட்டு மீண்டும் தப்பிக்க முயன்றனர். இதை பார்த்த பொதுமக்கள் கொள்ளையர்களை சுற்றி வளைத்து ஒருவனை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். மற்றொருவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். தகவல் அறிந்த கே.ேக.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் இருந்து கொள்ளையனை மீட்டு விசாரணை நடத்தினர்.

 அப்போது, மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிரபல கொள்ளை கும்பலை சேர்ந்த கலந்தர் உசேன் (34) என விசாரணையில் தெரியவந்துள்ளது. இவன் மகாராஷ்டிராவில் இருந்து ரயில் மூலம் நண்பர்களுடன் சென்னை வந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது  தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் பிடிபட்ட மகாராஷ்டிரா கொள்ளையனிடம் உடன் வந்த நபர் யார், எத்தனை பேர் சென்னை வந்துள்ளனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி சென்ற கொள்ளையனை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். சென்னையில்  மீண்டும் மகாராஷ்டிரா கொள்ளையர்கள் நடமாட்டத்தால் பொதுமக்கள் சாலைகளில் தனியாக நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர். எனவே, ரோந்து பணிகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: