×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கல்குவாரிகளால் தொடரும் விபத்துகள் விவசாயம் பாதிப்பதாக குற்றச்சாட்டு

காஞ்சிபுரம், மே 21: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால்  பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் கிராமச்சாலைகள் பாழாய்ப்போனதாலும், தூசி துகள்கள் அதிகமாகி சுவாசப் பிரச்சினைகள் ஏற்படுவதாலும் அதிலிருந்து தப்பிக்க கிராமத்தை விட்டு வெளியேறி நகரங்களில் பொதுமக்கள் தஞ்சம் அடைகின்றனர். மேலும் கிராமத்தில் உள்ள புராதன திருக்கோயில்களும் மாசுபாடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆர்ப்பாக்கம், மாகறல், சிங்கபெருமாள் கோயில், குன்றத்தூர், பரங்கிமலை, பல்லாவரம், மணமை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரிகள் வந்ததால் மூன்று போகமும் விளைந்த விவசாய நிலங்கள் தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் ஒருபோகம் கூட விளைவிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உத்திரமேரூர் அடுத்த பொற்பந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கூறியதாவது: எங்கள் பகுதியில் கல்குவாரி வருவதற்கு முன்பு விவசாய பாசனக் கிணறுகளில் நல்ல நீர்வளம் இருந்தது. கல் குவாரிக்காக ஆழமாக தோண்டப்பட்டதால் பாசனக் கிணறுகளில் நீர்வளம் குறைந்துவிட்டது. இதனால் விவசாயம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக அளவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து வெடிப்பதால் அருகில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்படுகிறது.  மேலும் எந்த நேரத்தில் பாறைத்துகள்கள் வந்து விழுமோ என்ற அச்சமாகவும் உள்ளது. இதனால் தினம்தினம் அச்சத்துடனேயே வாழ்ந்து வருகிறோம் என்றார். மேலும் அடிக்கடி அதிவேகத்தில் கனரக வாகனங்கள் கிராமத்திற்குள் வந்து செல்வதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இதேபோன்று உத்திரமேரூர் சாலையில் செய்யாற்றங்கரையில் அமைந்துள்ளது மாகறல் கிராமம்.  மாகறல் கிராமத்தைச் சுற்றி 5க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. அரசு அனுமதி இருந்தாலும் விதிகளை மீறி நாள்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்டவை கிராமத்தின் சாலைகள் வழியாக எடுத்துச்செல்லப்படுகிறது.  மேலும் கல் குவாரியில் இருந்து கற்களை எடுக்க அதிக அளவில் வெடிமருந்துகளை பயன்படுத்துகின்றனர். அதிக அளவிலான வெடிகளை பயன்படுத்தும்போது, கற்களின் துகள்கள் வெடித்துச் சிதறுவதால், கிராம பகுதியைச் சேர்ந்த மக்கள் பயத்துடனே இன்றும் வாழ்ந்து வருகின்றனர். மாகறல் கிராமத்திற்கு உட்பட்ட பெருமாள் கோயில் பகுதி, மேட்டு தெரு பகுதி, பள்ளிக்கூடத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சாலைக்கு வரவே அஞ்சும் நிலையும் உள்ளது.

கிராமத்தின் உள்ளே வரும்  கனரக லாரிகளால் கிராம சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதனால் வெளிப்படும் தூசி,  வீடு முழுவதும் படர்ந்து சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் இது குறித்து முழு ஆய்வு மேற்கொண்டு 24 மணி நேரமும் செல்லும் கனரக லாரிகள் செல்ல மாற்றுப் பாதையை ஏற்படுத்தி தரவேண்டும். சேதமடைந்த கிராம சாலைகளை மீண்டும் புதுப்பித்து தரவேண்டும். இப்பகுதியில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை ஓட்டிச்  செல்லும் பொதுமக்கள் பயமின்றி செல்லவும், விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் கல்குவாரிகளை தடை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Accidents ,Kanchipuram district ,Gulwuris ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோடை...