×

மதுராந்தகம் பேருந்து நிலையத்தில் தனியார் கம்பெனி பஸ்கள் நிறுத்தம்

மதுராந்தகம், மே 21: மதுராந்தகம் பேருந்து நிலையத்தின் உள்ளே, தனியார் பேருந்துக்களை நிறுத்துவதால் அரசு பஸ்கள் வெளியே மற்றும் உள்ளே செல்ல முடியாமல் பெரும் சிரமப்படுகின்றன. மேலும், பொதுமக்கள் செல்லமுடியாமல் தவிப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். மதுராந்தகம் நகராட்சியின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது மதுராந்தகம் அரசு பேருந்து நிலையம். இங்கிருந்து செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை மற்றும் திண்டிவனம், விழுப்புரம், பாண்டிச்சேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு மட்டும் அல்லாமல் மதுராந்தகத்தை  சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையத்தில், தனியார் கம்பெனிகளுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும்  பேருந்துகளை அவைகளின் வேலை நேரம் போக, ஓய்வு நேரத்தில் இங்கு கொண்டு வந்து  நிறுத்தி விடுகின்றனர். அதன் பின்னர், டிரைவர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று விடுகின்றனர். இவ்வாறு பேருந்து நிலையத்தை சுற்றிலும் பத்துக்கும் மேற்பட்ட  பேருந்துகள் தினந்தோறும் நிறுத்தப்படுகின்றன.

இதன் காரணமாக அரசு பேருந்துகள், பேருந்து நிலையத்திற்கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் முடியாமல், கடும் இட நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இதனால், மிகவும் தாமதமாக செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இதன் காரணமாக, பேருந்துகள் குறித்த நேரத்தில் பேருந்து நிலையத்திலிருந்து வெளியில் செல்ல முடியவில்லை என அரசு பேருந்து டிரைவர்கள், கண்டக்டர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். இதுமட்டுமின்றி பகல் மற்றும் இரவு நேரத்தில் இங்கு நிறுத்தப்பட்டிருக்கும் தனியார் பேருந்துகளின் பக்கவாட்டிலும் அவற்றின் மறைவான இடங்களிலும், சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக இப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், பள்ளி மாணவ, மாணவியர் அதிக அளவில் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் இட நெருக்கடியோடு நிறுத்தப்படும் அரசுப் பேருந்துகளில், அவர்கள் சிரமப்பட்டு ஏறி பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே, அரசு பேருந்துகளின் டிரைவர் கண்டக்டர் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவ, மாணவியர் நலனைக் கருத்தில் கொண்டு, பேருந்து நிலையத்தில் அனுமதியின்றி நிறுத்தப்படும் தனியார்  பேருந்துகளை நிறுத்த தடை விதிக்க வேண்டும்.  மேலும், தனியார் பேருந்துக்களை உள்ளே நிறுத்த அனுமதி அளித்தவர்களை கண்டறிந்து அவர்கள் மீது போக்குவரத்து துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : company ,bus stand ,
× RELATED ஆவின் பால் பாக்கெட்டுகளில்...