சீராக குடிநீர் விநியோகிக்க கோரி சப்கலெக்டர் அலுவலகத்தை காலிகுடங்களுடன் முற்றுகை

வீரவநல்லூர், மே 21: சீராக குடிநீர் விநியோகிக்க கோரி சேரன்மகாதேவி சப்கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். பத்தமடை பேரூராட்சிக்கு உட்பட்ட கரிசூழ்ந்தமங்கலம் வடக்கூர் பகுதியில், சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள இப்பகுதியில், கடந்த ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் பக்கத்து தெருக்களிலும், ஆற்றிலும் தண்ணீர் எடுத்துவந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவருகின்றனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் 35 பேர், நேற்று காலிகுடங்களுடன் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் விநியோகிக்க கோரி சப்-கலெக்டர் ஆகாஷிடம் மனு அளித்தனர். மனுவில், தங்கள் பகுதியில் சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்களை சரிசெய்ய வேண்டும். இதுகுறித்து பேரூராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்ததால் தண்ணீர் திறக்கும் பணியில் உள்ள கரிசூழ்ந்தமங்கலம் நடுவூரை சேர்ந்தவர், தவறான வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுக்கிறார் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: