ஏரல் அருகே குடிநீர் குழாய் உடைப்பால் சாலை சேதம்

ஏரல், மே 21: ஏரல் அருகே மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் மெயின் சாலையில் ஏற்பட்டுள்ள குடிநீர் உடைப்பினால் தண்ணீர் வீணாவதோடு அந்த இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. ஏரல் அருகே மங்கலகுறிச்சி தாமிரபரணி ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ஆற்றுக்குள் உறைகிணறு அமைக்கப்பட்டு குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் பெருங்குளம், பண்ணைவிளை, பண்டாரவிளை, நட்டாத்தி, சாயர்புரம் வழியாக தூத்துக்குடி உட்பட்ட பகுதிகளுக்கு குடிதண்ணீர் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. இதேபோல் சாயர்புரம் கூட்டுகுடிநீர் திட்டத்திலும், பெருங்குளம், நட்டாத்தி பகுதிகளுக்கும் மங்கலகுறிச்சி ஆற்றில் இருந்து குடிநீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

Advertising
Advertising

 இந்நிலையில் மங்கலகுறிச்சியில் இருந்து பெருங்குளம் செல்லும் மெயின் சாலையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாக பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் தினமும் வீணாக அருகில் உள்ள வயல் வெளிக்கு செல்கிறது. கோடை காலத்தில் பல கிராமங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் காலிகுடங்களுடன் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இங்கு குழாய் உடைப்பினால் தண்ணீர் இங்கு வீணாகி வருகிறது அப்பகுதி மக்களை வேதனை அடைய வைத்துள்ளது. மேலும் இந்த குடிநீர் உடைப்பினால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு படுகுழி ஏற்பட்டுள்ளது.

 ஏரலில் இருந்து திருநெல்வேலி, வைகுண்டம், பெருங்குளம் பண்டாரவிளை செல்லும் அனைத்து வாகனங்களும் மங்கலகுறிச்சியில் இருந்து இந்த சாலை வழியாகத்தான் சென்று வர வேண்டியது உள்ளது. இதனால் இந்த சாலையில் போக்குவரத்து அதிக அளவு நடந்து வருகிறது.

இந்நிலையில் இவ்வழியாக வரும் வாகனங்கள் இந்த படுகுழியில் விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து வாகனங்கள் விபத்துக்குள்ளாகாமல் இருப்பதற்காக குடிதண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு படுகுழியாக உள்ள இடத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த இடத்தில் இரண்டு கம்பிகள் நடப்பட்டுள்ளன. ஆனால் இரவு நேரத்தில் இவ்வழித்தடத்தில் உள்ள மின்கம்பங்களில் மின்விளக்கு இல்லாமல் இருளில் மூழ்கி போய் உள்ளதால் சாலையில் வரும் வாகனங்கள் இந்த படுகுழி மற்றும் ரோட்டின் நடுவில் உள்ள இந்த கம்பிகளில் மோதி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இந்த குடிநீர் குழாய் உடைப்பினை சீரமைத்து தண்ணீர் வீணாக செல்வதையும், விபத்து ஏற்பட்டு வருவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: