கழுகுமலை கோயிலில் வைகாசி விசாக திருவிழா பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன்

கழுகுமலை, மே 19: கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் வைகாசி திருவிழா நேற்று விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கழுகுமலையில் பிரசித்தி பெற்ற கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் வைகாசி விசாக திருவிழா 10ம்தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி கடந்த 8 நாட்களாக கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் செய்யப்பட்டு, இரவில் சப்பரத்தில் வசந்த மண்டகபடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் சுற்று வட்டார பகுதி மக்களும், பக்தர்களும் கழுகாசலமூர்த்தி கோயிலிலிருந்து தொடங்கி கிரிவலப்பாதையில் கும்பிடு சேவை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு நேற்று காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, உதயமார்த்தாண்ட அபிஷேகமும், திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜை, மற்ற கால பூஜைகள் நடந்தன. மதுரை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், தேனி, அய்யாபுரம், சம்பாகுளம், கரடிகுளம், வேலாயுதபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமப் மக்கள் பால்குடம், காவடி எடுத்து கிரிவலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். மதியம் சுவாமிக்கு பால், சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டன. மாலை பவுர்ணமி கிரிவலம் நடந்தது. இரவு கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திருவீதிவுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் பரமசிவம், செண்பகராஜ், சீர்பாதம் தாங்கிகள், பிரதோஷ குழு முருகன், கிரிவலக்குழு தலைவர் மாரியப்பன், மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசல்களை கட்டுப்படுத்த இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

Related Stories: