தூத்துக்குடி அருகே திடீரென உயிரிழந்த கர்ப்பிணியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

தூத்துக்குடி, மே 19: தூத்துக்குடி அருகேயுள்ள முத்தையாபுரம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் பீர்முகமது. இவரது மனைவி சகிராபானு (24). இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை ஆண்டுகளாகிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியான சகிராபானு நேற்று முன்தினம் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறி அங்குள்ள பிரேத பாதுகாப்பு அறையில் வைத்தனர்.

தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சப் கலெக்டர் சிம்ரன்சித் சிங் விசாரணை நடத்தினார். இதற்கிடையே இறந்த பெண்ணின் உறவினர்கள், சகிரா பானு இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை. ஆகையால் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தூத்துக்குடி -பாளையங்கோட்டை ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் போராட்டத்தை கைவிடாததால் நேற்று முன்தினம் இரவு வரை போராட்டம் நீடித்தது. ஆனாலும் போலீசார் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வழங்க மறுத்துவிட்டதால் வேறு வழியின்றி அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் இரவில் சகிரா பானு உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: