10 ஆண்டுகளாக பழுதாகி கிடக்கும் ஞானியார்குடியிருப்பு - புதுக்குளம் இணைப்பு சாலை

சாத்தான்குளம், மே 19: சாத்தான்குளம் அருகே ஞானியார்குடியிருப்பு - புதுக்குளம் இணைப்பு சாலை 10 ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால் கிராமமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். சாத்தான்குளம் ஒன்றியம் புதுக்குளம் ஊராட்சிக்குள்பட்ட ஞானியார்குடியிருப்பில் இருந்து புதுக்குளம் வரை இணைப்புச் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக திசையன்விளை செல்லும் மினிபஸ் உள்ளிட்ட இருசக்கர வாகனம் மற்றும் கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஞானியார்குடியிருப்பு, புதுக்குளம் பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் இந்த சாலை வழியாக சைக்கிளில் சென்று வருகின்றனர். மேலும் குலசேகரன்குடியிருப்பில் இருந்து ரேசன் பொருள்கள் புதுக்குளத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

இந்த சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித பராமரிப்பும் இன்றி குண்டும், குழியுமாக சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரியாக செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். சைக்கிளில் பள்ளி சென்று திரும்பும் மாணவ, மாணவிகள் பள்ளங்களில் தவறி விழுந்து காயமடைகின்றனர். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு ஞானியார்குடியிருப்பில் புதியசாலை போடப்பட்டது. அப்போது இந்த சாலையும் போடப்படும் என கிராம மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் போடப்படாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதுகுறித்து வட்டார காங்கிரஸ் பொருளாளர் சக்திவேல்முருகன் கூறுகையில், இந்த சாலையை கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் சாலை பழுதுப்பட்டு காணப்படுவதால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆதலால் அதிகாரிகள் ஆய்வு செய்து பழுதடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: