வாசுதேவநல்லூர் அருகே நாரணபுரத்தில் புனித லூர்து அன்னை ஆலய சப்பர பவனி

சிவகிரி, மே 19:  வாசுதேவநல்லூர் அருகே நாரணபுரம் புனித லூர்து அன்னை தேவலாய திருவிழாவில் சப்பர பவனி நடந்தது. பாளை மறை மாவட்டம், வேலாயுதபுரம் பங்கிற்கு உட்பட்டநாரணபுரம் புனித லூர்து அன்னை ஆலயத் திருவிழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. புளியங்குடி பங்குத்தந்தை அருள்ராஜ் கொடியேற்றினார். உதவி பங்குத்தந்தை அருள்மரியநாதன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார். 17ம்தேதி கோத்தகிரி பங்குத்தந்தை ராஜநாயகம் திருப்பலி நிகழ்த்தினார். புனித லூர்து அன்னை சப்பர பவனியை முன்னிட்டு வேலாயுதபுரம் பங்குத்தந்தை அருள் லூர்து எட்வின், சிங்கம்பாறை பங்குத்தந்தை செல்வராஜ்  கூட்டுதிருப்பலி நிறைவேற்றினர். தொடர்ந்து மலர்களாலும், பட்டு ஆடைகளாலும் அலங்கரிக்கப்பட்ட லூர்து அன்னை கரங்களில் குழந்தை இயேசுவை அரவணைத்து வீற்றிருக்கும் சொருபத்துடன் சப்பர பவனி நடந்தது. ஆலயம் முன் துவங்கிய இப்பவனி மெயின்ரோடு, வடக்குத் தெரு, பவுண்டு தொழுதெரு, கீழப்பஜார் வழியாக ஆலயத்தை மீண்டும் வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவ மக்கள் திரளாகப் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வேலாயுதபுரம் பங்குத்தந்தை அருள்லூர்து எட்வின் தலைமையில் திருச்சிலுவை சபையினர், ஊர் பொறுப்பாளர்கள், பங்கு மக்கள் செய்திருந்தனர்.

Related Stories: