பாளையில் பள்ளி மாணவர்கள் பாதுகாப்புக்காக பேரிகார்டு அமைத்து மாற்றுவழியில் வாகனங்களை திருப்பிய போலீசார்

நெல்லை, மே 19:  பாளையில் பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சாலையில் பேரி கார்டுகள் அமைத்து மாற்று வழியில்  வாகனங்களை போலீசார் திருப்பி விட்டனர். பாளை எல்ஐசி அலுவலகம் அருகே சாலையில் இரண்டுக்கு மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அங்குள்ள குறுகலான சாலையின் வழியாக வரும் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் வேகமாக சென்று வருவதாகவும், இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் காயம் அடைந்து வருவதாகவும், வாகனங்கள் அதிக (ஏர் ஹாரன்) சத்தம் எழுப்புவதால் இடையூறும் ஏற்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் எழுந்தன.

மேலும் இது தொடர்பாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கரனுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் பாளை உதவி கமிஷனர் கோடிலிங்கம் தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார் நேற்று சம்பந்தப்பட்ட சாலையின் இரு புறங்களிலும் பேரிகார்டுகள் அமைத்து வாகனங்களின் போக்குவரத்தை திருப்பிவிட்டனர். குறிப்பாக அவ்வழியாக நான்கு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் செல்ல முடியாத வகையிலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கூட மெதுவாகத்தான் அச்சாலையை கடந்து செல்ல முடியும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையொட்டி அந்தந்த பள்ளிகளைச் சேர்ந்த தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சாரணர் இயக்க மாணவ, மாணவிகளை கொண்டு தங்களது பள்ளியின் சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும் என போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.  இதேபோல் பள்ளி மாணவ, மாணவகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட பல்வேறு சாலைகளில் பேரிகார்டுகள் அமைத்து மாற்று வழியில் வாகனங்களை இயக்கவும்

நடவடிக்கை மேற்கொள்ள  போலீசார் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

Related Stories: