×

வெள்ளிச்சந்தை அருகே குளத்தில் சடலமாக கிடந்த வாலிபர் உடலை 3 வது நாளாக வாங்க மறுப்பு கலெக்டர், எஸ்.பி.யிடம் உறவினர்கள் புகார்

நாகர்கோவில், மே 19:   வெள்ளிச்சந்தை அருகே குளத்தில் சடலமாக கிடந்த வாலிபர் உடலை 3 வது நாளாக உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். இறப்பில் சந்தேகம் இருப்பதாக கலெக்டர், எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளனர். குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, அழகியநகர் பகுதியை சேர்ந்தவர் இளையராஜா (36). ராஜாக்கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் வெள்ளிச்சந்தை காலனி பகுதியை சேர்ந்த வினோதினி (26) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின் இளையராஜாவும், வினோதினியும் ஆசாரிப்பள்ளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். பின்னர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன், வினோதினியின் ஊரான வெள்ளிச்சந்தை காலனி பகுதிக்கே சென்று குடியேறினர்.இந்த நிலையில் கடந்த 15ம்தேதி வெள்ளிச்சந்தை அருகே உள்ள கண்ணமங்கலம் குளத்தில் இளையராஜா சடலமாக மீட்கப்பட்டார். கரை பகுதியில் அவரது பைக், துணிமணிகள் இருந்தன. அந்த துணிமணிகளுடன் ஒரு சிரிஞ்ச், மருந்து பாட்டில் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் இளையராஜா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 16ம்தேதி அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெள்ளிச்சந்தை போலீசார் விசாரணை நடத்தி இளையராஜா தண்ணீரில் மூழ்கி இறந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் இளையராஜா சாவில் சந்தேகம் இருப்பதாக ஆரல்வாய்மொழி அழகிய நகரில் உள்ள அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே இது பற்றி முறையாக விசாரணை நடத்தினால் தான்  இளையராஜா உடலை வாங்குவோம் என கூறி அவர்கள் நேற்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து இளையராஜாவின் சகோதரி இந்திரா கலெக்டர், எஸ்.பி.க்கு புகார் மனு அளித்துள்ளார். அதில் எனது தம்பி இளையராஜா சாவில் சந்தேகம் உள்ளது. எனவே இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த உத்தர விட வேண்டும். எனது தம்பியை திட்டமிட்டு கொலை செய்து இருப்பார்களோ? என்ற சந்தேகம் உள்ளது என கூறி உள்ளார். இளையராஜா சாவுக்கு நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

Tags : Relatives ,Collector ,SB ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...