×

இரணியல் அருகே இரவு ரோந்து பணியில் சப் - இன்ஸ்பெக்டரை தாக்கி சீருடை கிழிப்பு 3 பேர் மீது வழக்கு

திங்கள்சந்தை, மே 19:   இரணியல் அருகே இரவு நேர ரோந்து பணியில் இருந்த எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். இரணியல் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ராம கணேசன். சம்பவத்தன்று இவர் இரவு ரோந்து பணியில் இருந்தார். காரங்காடு குருசடி பக்கம் வாகன தணிக்கையில் இருந்த போது அந்த வழியாக மினி டெம்போ வந்தது. டெம்போவில் 3 பேர் இருந்தனர். அவர்களை நிறுத்தி எஸ்.ஐ. ராம கணேசன் விசாரித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒருவர் நாகர்கோவிலில் இருந்து வருவதாகவும், மற்றொருவர் குருந்தன்கோடு சென்று வருவதாகவும் கூறினர். இருவரும் மாறி, மாறி பேசினர். 3வது நபர் எதுவும் பேசாமல் போதையில் இருந்தார். சந்தேகம் அடைந்து மூவரிடமும் விசாரித்த போது அவர்கள் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மூவரையும் காவல் நிலையத்துக்கு வருமாறு எஸ்.ஐ. ராம கணேசன் கூறினார்.

அப்போது மூவரும் திடீரென ராம கணேசனின் சீருடையை பிடித்து இழுத்து, உன்னை  ஒரு வழிப்பண்ணாமல் விட மாட்டோம் என கூறி தாக்கினர். இதில் அவரது சீருடை கிழிந்து கீழே விழுந்தார். அந்த சமயத்தில் அந்த கும்பல் தப்பியது. இது குறித்து எஸ்.ஐ. ராம கணேசன் இரணியல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வடக்கு நுள்ளிவிளையை சேர்ந்த செல்வக்குமார் என்ற குமார், மகேஷ்  மற்றும் பார்த்தால் அடையாளம் தெரியும் ஒரு நபர் சேர்ந்து இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர்கள் மூன்று 3 பேர் மீதும், இந்திய தண்டனை சட்டம் 294 (பி), 353, 506 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இரவு நேர ரோந்து பணியின் போது எஸ்.ஐ. மீது நடந்த தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : patrols ,firepower - suicide inspector ,
× RELATED போலீசார் ரோந்து பணியை கண்காணிக்க `இ-பீட்’ ஆப்