×

கன்னியாகுமரியில் லாட்ஜ் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம்

கன்னியாகுமரி, மே 19:  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விபரங்களை ஆன்-லைன் மூலம் பதிவு செய்வது குறித்து கன்னியாகுமரியில் லாட்ஜ் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கன்னியாகுமரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 2 பேர் லாட்ஜில் தங்கி இருந்து மாவட்டத்தின் பல பகுதிகளை புகைப்படம் எடுத்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுபோல சமீபத்தில் ரஷ்ய நாட்டை சேர்ந்த ஒரு சுற்றுலா பயணி கன்னியாகுமரி லாட்ஜில் இறந்து கிடந்தார். போலீசார் விசாரணை நடத்தியபோது இவர்கள் தங்கியிருந்த முகவரி உள்ளிட்ட தகவல்கள் லாட்ஜில் சரியாக பதிவு செய்யாதது தெரிய வந்தது.

தற்போது லாட்ஜ் நிர்வாகம் ஆன்-லைன் மூலம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் விபரங்களை பதிவு செய்ய காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த தகவல்களை வைத்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை காவல்துறையினர் கண்காணிக்க முடியும். இந்த நிலையில் போலீஸ் சார்பில் லாட்ஜ் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரியில் நடந்தது. டிஎஸ்பி பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீஸ் அதிகாரிகள், லாட்ஜ் உரிமையாளர்கள் சங்க தலைவர் குணசீலன் கோமஸ், செயலாளர் வக்கீல் ராஜேஷ், துணைச்செயலாளர் ஜாண்ெகன்னடி, துணைத்தலைவர் தாமஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டிஎஸ்பி பேசுகையில், லாட்ஜ் உரிமையாளர்கள் தங்கும் விடுதிகளுக்கான விதிமுறைகளை சரிவர கடைபிடிக்க வேண்டும். இதற்காக உள்ள நடைமுறைகளை முறையாக  கையாள வேண்டும். அனைத்து லாட்ஜ்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட லாட்ஜ்களில் தங்குவோரின் முழு விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும். வெளிநாட்டினர் அசம்பாவித சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் அவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க லாட்ஜ் உரிமையாளர்கள் காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

Tags : meeting ,lodge owners ,Kanyakumari ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...