நீதிமன்ற உத்தரவை மதிக்காத அவலம் போக்குவரத்து சிக்னல்களில் விளம்பர தட்டிகள்

திருப்பூர்,மே 19: திருப்பூர் மாநகர பகுதிகளில் நுகர்பொருள் வணிக நிறுவனங்கள் தங்களுடைய பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும், பொது மக்களின் கவனத்தை கவர நடிகர்,நடிகைகள் உட்பட பல்வேறு விளம்பர மாடல்களை கவர்ச்சியான உடைகளை அணிந்து கடைகளின் பெயர்களை உள்ளடக்கிய தட்டிகளை சிக்னல் கம்பங்களில் தொங்க விட்டுள்ளனர். தமிழகத்தில் தென்மேற்கு, வடகிழக்கு மழைக்காலங்களில் சூறாவளிக்காற்றுடன் மழைபெய்யும் போது, விளம்பர தட்டிகள் வாகனங்கள் மீதும், நடந்து செல்லும் பொது மக்கள் மீதும்  விழுந்து உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. விளம்பர தட்டிகளில் விளம்பர மாடல்கள் அரைகுறை ஆடையுடன் கவர்ச்சியாக காட்சிப்படுத்தப்படுவதால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதைந்து வாகன விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

சிக்னல்களில் பொருத்தப்படும் விளம்பர தட்டிகள் தரமான தகரங்கள், கம்பிகளை பயன்படுத்துவது இல்லை. இதனால், காற்றில் அசைந்து சில மாதங்களில் கீழே விழுந்து உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உட்பட சிலர் உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் போக்குவரத்து சிகனல்களில் பொருத்தப்பட்டுள்ள அனைத்த விளம்பர தட்டிகளை அகற்ற வேண்டுமென கடந்த 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள போக்கவரத்து சிகனல்கள், தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகளின் இரு புறமும் வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர தட்டிகளும் அகற்றப்பட்டது. தற்போது திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள், சாலைகளின் இருபுறம் விளம்பர தட்டிகளை வைத்து பொது மக்களின் உயிர்களுக்கும், வாகன ஓட்டிகளின் உயிர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்வரின் உத்தரவுகளையும், போக்குவரத்து விதிகளையும், நீதிமன்ற உத்தரவுகளையும் அரசு அதிகாரிகள் முதல் பாமர பொது மக்கள் வரை கடைபிடிக்க தவறி வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் 24 மணி நேரம் மது விற்பனை, மணல் கொள்ளை, தடைசெய்யப்பட்ட லாட்டரி, குட்கா பொருட்கள் தங்குதடையின்றி விற்பனை நடக்கிறது. சீட்டாட்டம், சேவக்கட்டு, மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் விபசாரம் உட்பட சமூகவிரோத செயல்கள் பகிரங்கமாக நடக்கிறது. நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாக அதிகாரிகளின் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: