270 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருப்பூர், மே 19: அவிநாசி, சேவூர் பகுதியில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில், தடை செய்யப்பட்ட 270 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூர் கலெக்டர் பழனிசாமி உத்தரவின் பேரில், அவிநாசி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் கருப்புச்சாமி, சுகாதார மேற்பார்வையாளர் ஆகியோர் கொண்ட குழுவினர் அவிநாசி பேரூராட்சியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அவிநாசி  சேவூர் சாலை, கோவை பிரதான சாலை, புதிய பஸ் நிலையம், சீனிவாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  உள்ள மொத்த விற்பனையாளர்கள், டீக்கடைகள், தள்ளு வண்டி வியாபாரிகள், உணவுக் கூடங்கள், மளிகை கடைகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 210 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் விற்பனைக்கும், உபயோகத்திற்கும் வைத்திருந்த வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்பட்டதில், மொத்தம் ரூ.21 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதேபோல் சேவூர் ஊராட்சிக்கு உட்பட்ட கைகாட்டி ரவுண்டானா, கோபி சாலை, புளியம்பட்டி சாலை ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகள், உணவங்கள், இறைச்சி கடைகள், மளிகை கடைகளில் அவிநாசி வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி லட்சுமி தலைமையிலான 12 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பாலித்தின் பைகள், ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய டம்ளர்கள் உள்ளிட்டவை 60 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதில் வணிக நிறுவனங்களுக்கு ரூ.4,800 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: