புதர் மண்டி சேதமடைந்த கால்வாய் சீரமைக்க கோரிக்கை

பொள்ளாச்சி, மே 19:  பொள்ளாச்சி கிராமங்கள் வழியாக செல்லும், பிஏபி கிளை கால்வாய் புதர்மண்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த  ஆழியார் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம், புதிய ஆயக்கட்டு, பழைய ஆயக்கட்டு பாசன பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆனால், விவசாய பாசனத்துக்கு தண்ணீர் செல்லும் பிஏபி கிளை கால்வாய்களில் பல இடங்களில் புதர் மண்டி, பழுதன நிலையில் உள்ளது.  ஒவ்வொரு ஆண்டும், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட பின், பழுதான கிளை கால்வாய்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் முறையாக மேற்கொள்ளாமல் கிடப்பில் போடப்படுவதால், கிராமங்கள் வழியாக செல்லும் பல கிளை கால்வாய்கள் சேதடைந்த நிலையில் இருப்பது அதிகரித்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள்,  பிஏபி பாசன நீரையே நம்பியுள்ளனர். ஆனால், பிஏபி திட்ட கிளை கால்வாய்களில் பல சேதமடைந்து தண்ணீர் அதிகளவில் விரயமாகி வருகிறது. பழுதடைந்து மற்றும் புதர் மண்டிய கிளை கால்வாய்களின்  பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்து உருகுலைந்து காணப்படுகிறது.

பொள்ளாச்சி கிராமங்கள் வழியாக செல்லும் புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்குட்பட்ட கிளை கால்வாய்களில், சில ஆண்டுகளுக்கு முன்பு , ஒருசில இடங்களில் மட்டும்  பணிகள் நடந்தது. அதன்பின் அந்த பணியுடன் நின்று போனதால், இன்னும் பல பகுதிகளில் கால்வாய்கள் புதர்கள் மண்டி சேதமடைந்தவாறும், கற்கள் மற்றும் மணல் குவிந்து காணப்படுகிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு, போர்க்கால அடிப்படையில் கிளை கால்வாய்களை சீரமைத்தால் மட்டுமே, அணைகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் விரயமாகாமல் கடைகோடி விவசாயிகளுக்கு முறையாக பகிர்ந்தளிக்க முடியும். தற்போது ஆழியாரிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லாததால்,  பழுதான நிலையில் உள்ள பிஏபி கிளை கால்வாய்களை  பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: