ரெட்டியார்சத்திரம் அருகே ஆக்கிரமிப்பு பெயரில் ஊராட்சி மரங்கள் வெட்டி விற்பனை விவசாயிகள் புகார்

செம்பட்டி, மே 19: ரெட்டியார்சத்திரம் அருகே ஆக்கிரமிப்பு பெயரில் ஊராட்சிக்கு சொந்தமான மரங்களை இரவோடு, இரவாக வெட்டி விற்று விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், ராமபுரம் அருகே உள்ளது நீலமலைக்கோட்டை கிராமம். இங்குள்ள ஜோத்தல்நாயக்கன் குளம் பழநி நீர்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மொத்த பரப்பு 7.87.50 ஹெக்டேர் ஆகும். 14 ஏக்கர் நீர்பிடிப்பு பகுதியும், 310 மீட்டர் நீளமுள்ள கரை கொண்டுள்ள இந்த குளத்தில் ஆக்கிரமிப்புகள் இருந்த வந்தன. இதனை அகற்றுமாறு விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.  

இதை ஏற்று மாவட்ட கலெக்டர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். அதன்படி ஜோத்தல்நாயக்கன் குளத்தில் ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் ஆக்கிரமித்து இருந்த 100க்கும் மேற்பட்ட இலவ மரம், புளிய மரம், வேப்ப மரங்கள் அகற்றப்பட்டது. இவையனைத்தும் ஊராட்சி கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், இரவோடு இரவாக தர்மத்துப்பட்டியை சேர்ந்த மர வியாபாரிக்கு விற்கப்பட்டு விட்டதாக இப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஜோத்தால்நாயக்கன்குளத்தில் 1 ஏக்கர் நிலப்பரப்பு ஆக்கிரமிப்பில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டது. இவையனைத்தும் இரவோடு இரவாக கடத்தி விற்கப்பட்டுள்ளது. இதகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆக்கிரமிப்பு மூலம் அகற்றப்பட்ட மரங்களை முறையாக ஏலம் விடாமல் ஊராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக செயல்பட்டு உள்ளது. மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: