கொடைக்கானலில் ரூ.25 லட்சத்தில் நகராட்சி சார்பில் புதிய படகு குழாம் ஆணையாளர் தகவல்

கொடைக்கானல், மே 19: கொடைக்கானல் நகராட்சி சார்பில் புதிய படகு குழாம் ரூ.25 லட்சம் செலவில் அமைக்கப்படும் என ஆணையாளர் முருகேசன் தெரிவித்தார். கொடைக்கானல் நகரின் இதயமாக விளங்கும் நட்சத்திர ஏரியில் அரசு, தனியார்கள் சார்பில் படகு போக்குவரத்து நடைபெறுகிறது. கொடைக்கானல் நகராட்சியின் சார்பாக கலையரங்கம் முன்பு படகு குழாம் இயங்குகிறது. இங்கு பழுதடைந்த படகுகள் மற்றும் நடைபாதைகள் சீரமைத்தல், பாதுகாப்பு கவச உடை வாங்குதல் போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகள் சுமார் ரூ.25 லட்சம் செலவில் நடந்து வந்தது. இப்பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று புதுப்பிக்கப்பட்ட புதிய படகு குழாமினை நகராட்சி ஆணையாளர் முருகேசன் திறந்து வைத்தார். இதில் பொறியாளர் சண்முகம், நகரமைப்பு அலுவலர் பெரியசாமி, ஆய்வாளர் ரவிச்சந்திரன், ஒப்பந்தகாரர் முரளி, சுகாதார ஆய்வாளர் சுப்பையா உள்பட பலர் பங்கேற்றனர்.

பின்னர் ஆணையாளர் நிருபர்களிடம் கூறுகையில்,‘

தற்போது 25 லட்ச ரூபாய் செலவில் படகு குழாம் சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. அதேபோல பிரையண்ட் பூங்கா எதிரில் சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் புதிய படகு குழாம் அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைவில் தொடங்கும். கொடைக்கானல் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து துணிப்பைகளையே பயன்படுத்த வேண்டும். படகுகளில் செல்பி எடுத்தல் போன்றவற்றை செய்யக்கூடாது. அனைவரும் உயிர் காக்கும் சாதனம் அணிந்து படகு பயணத்தை தொடர வேண்டும்’ என்றார். மேலும் ஆணையர் கலையரங்கம் பகுதியில் உள்ள பழுதடைந்த ஸ்கேட்டிங் ஹால் மற்றும் மின்சார கார் ஆகியவற்றை உடனடியாக பழுது நீக்கவும், அப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டு வந்த கட்டுமான பணிகளை நிறுத்தவும் உத்தரவிட்டார்.

Related Stories: