திண்டுக்கல்லில் பாலித்தீன் பயன்பாடு சுகாதாரத்துறை ரெய்டில் 50 கிலோ சிக்கியது

திண்டுக்கல், மே 19: தமிழகத்தில் கடந்த ஜன.1 முதல் பாலிதீன் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடைமுறையால் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. ஓட்டல்க, டீக்கடைகளில் மீண்டும் பாலிதீன் பைகளில் சாம்பார், குழம்பு, சட்னி, டீயை கட்டி தருகின்றனர். இதேபோல கறிக்கடை உட்பட பல இடங்களில் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளது. தடை செய்யப்பட்ட தொழிற்சாலைகளும் மீண்டும் புத்துயிர் பெற துவங்கியுள்ளன. இதுகுறித்து பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியானது. இதையடுத்து சுகாதாரத்துறையினர் மீண்டும் அதிரடி சோதனையை துவங்கியுள்ளனர். திண்டுக்கல் வாணிவிலாஸ் மேடு, பழநிரோடு, தாடிக்கொம்புரோடு, பெரியகடை வீதி உட்பட பல இடங்களில் உள்ள ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகைகடைகளில் சுகாதாரத்துறை வட்டார மேற்பார்வையாளர் முகம்மது கமாலுதீன், சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், சண்முகவேல், அன்பரசு, வெற்றிவேல் ஆகியோர் சோதனை நடத்தினர். இதில் 50 கிலோ பாலிதீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘பாலிதீன் பைகளில் சூடான பொருட்களை கட்டி கொடுப்பதால் வியாதிகள் ஏற்படுகிறது. பாலிதீனால் மண் வளம் பாதிக்கப்படுகிறது. கால்நடைகள் உண்பதால் குடல் இரப்பை நோய் ஏற்படுகிறது.இதற்காகவே பாலிதீன் பயன்பாடு தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது கடைகளில் முதல் முறையாக இருப்பதால் பறிமுதல் செய்துள்ளோம். இதேநிலை தொடர்ந்தால் கடுமையான நடவடிக்கை எடுத்து அபராதம் விதித்து, வழக்குபதிவு செய்வோம். பாலிதீன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். இரவு நேரங்களில செயல்பட்டால் கலெக்டரிடம் தெரிவித்து, அவற்றின் உரிமத்தை ரத்து செய்வதோடு, அந்த தொழிற்சாலைக்கும் சீல் வைப்பதற்கும், வழக்கு தொடர்வதற்கும் ஏற்பாடு செய்வோம். சட்டவிரோதமாக பாலிதீன் பயன்பாடுகள் இருந்தால் பொதுமக்கள் அந்த பகுதி சுகாதார ஆய்வாளர்களுக்கு தகவல் தரலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்’ என்றனர்.

Related Stories: