×

வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை

விருதுநகர், மே 19: வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள், செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை என ஆலோசனைக் கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்துள்ளார். வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சிவஞானம் தலைமை வகித்தார். எஸ்பி ராஜராஜன் முன்னிலை வகித்தார். இதில், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், ‘விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்திலும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குகள் செந்திக்குமார நாடார் கல்லூரி வளாகத்திலும் எண்ணப்பட உள்ளன. மின்னணு வாக்கு இயந்திரங்கள் உள்ள இரண்டு மையங்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை தினத்தன்று (மே 23) எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர்களின் பிரதிநிதிகளுக்கான அடையாள அட்டை வைத்திருக்கும் நபர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவர். உள்ளே நுழையும் ஒவ்வொரு நபரும் மூன்று கட்ட பாதுகாப்பு அலுவலர்களிடம், உரிய ஆவணங்களை காட்டினால் மட்டுமே நுழைய அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்லும் நபர்கள் செல்போன் எடுத்து செல்ல அனுமதியில்லை. உள்ளே செல்லும் நபர்கள் தங்களது அடையாள அட்டை, பேனா, பேப்பர் மற்றும் கால்குலேட்டர் தவிர, பிற பொருட்கள் எடுத்து செல்ல முடியாது. மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் சோதனையிடும் இடங்களில் உரிய அடையாள அட்டையைக் காட்டினால் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படுவர். வாக்கு எண்ணும் அறைக்குள் தேவையற்ற நபர்கள் செல்ல அனுமதியில்லை. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அறையிலும் 14 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8 மணிக்கு தபால் ஓட்டுகளும், அரைமணி நேரத்திற்கு பிறகு மின்னணு இயந்திர வாக்குகள் எண்ணிக்கை துவங்கும். வாக்கு எண்ணும் மையப்பணியாளர்கள் பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், 22ம் தேதி எந்த அறையில் தொகுதி அறையில் ஒதுக்கப்படும். 23ம் தேதி காலை 5 மணிக்கு எந்த மேஜையில் அமர்ந்து வேலை செய்யவார் என்ற தகவல் தெரிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கையில் இம்முறை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு 5 வாக்குச்சாவடிகளின் ‘விவிபேடு’ மெஷினில் உள்ள வாக்குச்சீட்டுகள் எண்ணப்பட உள்ளன. ஒவ்வொரு மெஷினில் பதிவான வாக்குகள் வேட்பாளர் வாரியாக பிரிக்கப்பட்டு, 25 சீட்டுகள் அடங்கிய கட்டுகளாக போடப்பட்டு கட்டுகள் எண்ணப்படும். மின்னணு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும், விவிபேடு மிஷினில் உள்ள வாக்குச்சீட்டுகளும் சரிபார்க்கப்பட உள்ளன. இம்முறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக காலதாமதம் ஆகும்’ என்றார். கூட்டத்தில் டிஆர்ஓ உதயகுமார், திட்ட இயக்குநர் சுரேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...