ரங்கத்தில் உள்ள இசைப்பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை நாளை துவக்கம் கலெக்டர் தகவல்

திருச்சி, மே 19: ரங்கத்தில் உள்ள இசைப்பள்ளிக்கு மாணவர்கள் சேர்க்கை நாளை (20ம் தேதி) துவக்கப்படுகிறது என  கலெக்டர் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட அரசு இசைப்பள்ளி 1997 முதல் தொடங்கப்பட்டு தற்போது ரங்கம் மேலூர் ரோடு, மூலத்தோப்பில்  செயல்பட்டு வருகிறது. இசைப்பள்ளியில் குரலிசை, நாதசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய இசைப்பயிற்சி வகுப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இது மூன்றாண்டு சான்றிதழ் படிப்பாகும்.இதில் 12 வயது முதல் 25 வயது வரையுள்ள மாணவ, மாணவியர் சேர்க்கப்படுகின்றனர். குரலிசை, வயலின், மிருதங்கம் மற்றும் பரதநாட்டிய பயிற்சிக்கு 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேவாரம், நாதசுரம், தவில் ஆகிய கலைகளுக்கு ஆரம்பக் கல்வித் தகுதியில் சலுகை உண்டு.

இப்பள்ளியில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை முழுநேர பயிற்சி அளிக்கப்படுகிறது. மூன்றாண்டு இசைப்பயிற்சிக்கு பிறகு தேர்ச்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.152 மட்டுமே வசூலிக்கப்படும். மாதந்தோறும் ரூ.400 ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் வெளியூர் மாணவர்களுக்கு அரசு விடுதியில் இலவசமாக தங்கிப் பயிலவும்,  பஸ் பாஸ், இலவச சைக்கிள் அரசால் வழங்கப்படுகிறது.  இசைப்பள்ளிக்கான மாணவர் சேர்க்கை நாளை முதல் நடைபெறும். இதில் பயில விரும்பும் மாணவ, மாணவிகள் இசைப்பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Related Stories: