திருச்சி சிங்காரதோப்பில் 110 ஆண்டுகளாக செயல்பட்ட சிட்டி கிளப் இடித்து தரைமட்டம் மாநகராட்சி அதிரடி புதிய வணிக வளாகம் கட்ட முடிவு

திருச்சி, மே 19:   திருச்சி சிங்காரதோப்பில் 110 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிட்டி கிளப்பை மாநகராட்சி நிர்வாகம் நேற்று அதிரடியாக இடித்தது. இந்த இடத்தில் ஸ்மார்ட் சிட்டியின் கீழ் புதிய வணிக வளாகம் கட்டப்படுகிறது. திருச்சி மாநகரின் மையப்பகுதி சிங்காரத்தோப்பு. அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இந்த பகுதியில் தான் உள்ளது. இங்குள்ள மேலரண்சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 3,889 ச.மீ. பரப்பளவு உள்ள இடத்தை அப்போதைய நகராட்சி 1905ம் ஆண்டு முதல் சிட்டி கிளப் என்ற பொழுது போக்கு மன்றத்துக்கு 85 ஆண்டுகளுக்கு குத்தகைவிட்டது. 85 ஆண்டு கால குத்தகை முடிந்ததும், 28.5.1989ல் அப்போதைய சிட்டி கிளப் தலைவர், மேலும் 25 ஆண்டுகளுக்கு நீடித்து தரும்படி திருச்சி நகராட்சிக்கு கடிதம் எழுதினார். அதன்படி, 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் நீடித்து கொடுத்தது. சிட்டி கிளப்பில் அவ்வப்போது விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இதில், திருச்சி மாநகரின் முக்கிய பிரமுகர்கள் உள்பட 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

சிட்டி கிளப் குத்தகைக்கு 2012-13ல் வருட வாடகையாக ரூ.1,613 என நிர்ணயம் செய்து வசூல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த இடம் மாநகராட்சியின் வளர்ச்சி பணிக்கு தேவைப்படுவதால் கடந்த 25.9.2013ம் தேதி மாமன்ற தீர்மானம் எண்.226படி குத்தகை ரத்து செய்யப்பட்டது. இதனால் அந்த இடத்தை காலி செய்து மாநகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என 3 மாத கால அவகாசம் வழங்கி சிட்டி கிளப் செயலாளருக்கு 4.10.2013ல் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

ஆனால், இந்த அறிவிப்பை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சிட்டி கிளப் செயலாளர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், குத்தகை நீடிப்பு காலமான 25 ஆண்டுகள் 2014ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனால் அதன்பின்பு குத்தகை உரிமத்தை நீட்டிப்பு செய்து தரக்கோரி விண்ணப்பமும் கொடுக்கப்படவில்லை. இதனால் அந்த இடம் திருச்சி மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அபிவிருத்தி பணிக்காக தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து குத்தகை இடத்தை கையகப்படுத்த 7.12.2018ல் மாநகராட்சி சார்பில் சிட்டி கிளப் தலைவர் கேசவன், செயலாளர் வெங்கடாசலம் ஆகியோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிட்டி கிளப்பை காலி செய்துவிட்டு அந்த இடத்தில் பன்அடுக்கு வாகனம் நிறுத்திமிடம் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக 5.12.2018ம் தேதி ஒப்பந்த புள்ளி விடப்பட்டு அபிவிருத்தி பணி தொடங்கப்பட்டது. இதற்கு தடை கோரி சிட்டி கிளப் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த வழக்கை கடந்த 27.3.2019ம் தேதியன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து சிட்டி கிளப் நிர்வாகிகள் மாநகராட்சி ஆணையரிடம் விளக்க கடிதம் கொடுத்தனர். 3,889 ச.மீ. பரப்பில் அமைந்துள்ள சிட்டி கிளப்பிற்கு வழங்கப்பட்ட குத்தகையை மாநகராட்சி ரத்து செய்யப்பட்டு விட்டதாலும், இதற்கு தடை கேட்ட மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டதாலும், சிட்டி கிளப் நிர்வாகத்தினரை அனுமதியின்றி குடியிருப்பவராக கருதி குத்தகை இடத்திலிருந்து வெளியேற மாநகராட்சி உத்தரவிட்டது.

இதனால் அனுமதியின்றி குடியிருப்பவர் நேற்று (18ம் தேதி) காலை 6 மணிக்குள் வெளியேற மாநகராட்சி உத்தரவிட்டது. தவறும் பட்சத்தில் மாநகராட்சியால் கையகப்படுத்தப்பட்டு சுவாதீன செலவினங்கள், அனுமதியின்றி குடியிருப்பவரிடம் (சிட்டி கிளப்பிடம்) வசூல் செய்யப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த உத்தரவு நேற்று முன்தினம் சிட்டி கிளப் செயல்படும் கட்டிடத்தில் ஒட்டப்பட்டது. எனவே இரவோடு இரவாக அந்த இடத்தை நிர்வாகிகள் காலி செய்து விடுவார்கள் என எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் நிர்வாகிகள் யாரும் அந்த இடத்தை காலி செய்யவில்லை. இந்த நிலையில் நேற்று காலை 6 மணிக்கு திருச்சி கோட்டை போலீசார் உள்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நகர ெபாறியாளர் அமுதவள்ளி, செயற்பொறியாளர் சிவபாதம், உதவி ஆணையர்கள் குணசேகர், பிரபாகரன், உதவி செயற்பொறியாளர்கள் ரவீந்திரன், ராஜேஸ்கண்ணா, ஜெயகுமார், பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். சிறிது நேரத்தில் 5 பொக்லைன் இயந்திரங்கள், 10 டிப்பர் லாரிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் வந்தனர். அவர்கள் அங்கிருந்த பொருட்களை திறந்தவெளிக்கு கொண்டு வந்து வைத்தனர். இதைத்தொடர்ந்து ெபாக்லைன் இயந்திரங்கள் மூலம் சிட்டி கிளப் கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த இடத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் பன்அடுக்கு வாகன நிறுத்தத்துடன் கூடிய வணிக வளாகம் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என தெரிகிறது.

அமைச்சரும் உறுப்பினர் சிட்டி கிளப் தலைவர் கேசவன், செயலாளர் வெங்கடாசலம், துணைத்தலைவர் மலர்செழியன் ஆகியோர் அளித்த பேட்டி: சிட்டி கிளப் மாணவ, மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்தி வந்தது. மாநகராட்சி இப்போது அராஜகமாக கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி உள்ளது. இந்த சிட்டி கிளப்பில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் உறுப்பினராக உள்ளார். இது குறித்து ஏற்கனவே அவரிடம் முறையிட்டோம். மேலிட பிரஷர் இருக்கிறது. என்னால் ஒன்றும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டார். முதல்வரின் உறவினர் நிறுவனம்தான் இந்த இடத்தில் கட்டுமான பணிகளை செய்ய ஒப்பந்தம் எடுத்துள்ளதாக தெரிகிறது. இதை எதிர்த்து நாங்கள் கோர்ட்டில் முறையிடுவோம். சட்டரீதியாக சந்திப்போம்’ என்றனர். ரூ.4.64 கோடி வருவாய் இழப்பு சிட்டி கிளப் மாநகராட்சி மையப்பகுதியில் அமைந்திருந்தும் குத்தகை தொகை மிக சொற்ப அளவில் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநில கணக்காயர் தணிக்கையில் 1989-90 முதல் 2016-17 ஆண்டுகள் வரை மட்டும் குத்தகை தொகையாக ரூ.4.64 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர் என்று மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: