ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் விவசாய தொழிலாளர் சங்கம் முடிவு

தஞ்சை, மே 19:  தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று  ஏஐடியூசி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோவிந்தராசு தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் எதிர்கால பணிகள் மற்றும் நடந்துள்ள பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் பக்கிரிசாமி பேசினார். மாநில நிர்வாகக்குழு முடிவுகளை விளக்கி மாநில பொருளாளர் சந்திரகுமார் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பாரதி, விவசாய தொழிலாளர் சங்க அமைப்பின் மாவட்ட பொருளாளர் .குருசாமி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், ஜூன் முதல் வாரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு பிரசாரம் செய்வது, தகுதியான விவசாய தொழிலாளர்களுக்கு குடிமனை பட்டா வழங்கக்கோரி மாவட்டம் முழுமையாக கிராம நிர்வாக அலுவலகங்களில் கோரிக்கை மனு அளிப்பது. கல்லணை தொடங்கி அணைக்கரை வரை உள்ள நீர் ஆதார மையங்களை அடையாளம் கண்டு புனரமைத்து பாதுகாக்க வேண்டும். நூறு நாள் வேலைதிட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்தாமல் கிராமப்புற விவசாய கூலித்தொழிலாளர்களை அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: