×

கரூர் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

கரூர், மே19: கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி உற்சவ விழாவினை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை 4மணி வரை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கரூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி உற்சவ விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விழா கடந்த 12ம்தேதி மாலை நடைபெற்ற கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து, முக்கிய விழாவான பூச்சொரிதல் விழா நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ராயனூர், தாந்தோணிமலை, வெங்கமேடு, வடிவேல் நகர், கரூர் நகரம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 44 பூத்தட்டுகள் அலங்கரிக்கப்பட்டு மேளதாளத்துடன், நேற்று முன்தினம் இரவு 10.30மணி முதல் நேற்று அதிகாலை 4மணி வரை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

விடிய விடிய நடைபெற்ற இந்த பூச்சொரிதல் விழாவில் கரூர் நகரப்பகுதி முழுவதும் இருந்த வந்திருந்த திரளான பக்தர்கள்  கலந்து கொண்டனர். தொடர்ந்து, 19ம்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், 26ம்தேதி முதல் 28ம்தேதி வரை மாவிளக்கு, பால்குடம், அக்னி சட்டி, அலகு, காவடி போன்ற நிகழ்ச்சிகளும், 27ம்தேதி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சியும், இதனைத் தொடர்ந்து நடக்கும் வான வேடிக்கை நிகழ்ச்சியும் மே 29ம்தேதி அன்று நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளை டவுன் போலீசாரும் செய்து வருகின்றனர்.

Tags : devotees ,festival celebration ,Karur Mariamman Temple ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...