திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை மழை பெய்தும் பயனில்லை மா விவசாயிகள் புலம்பல்

திண்டுக்கல், மே 17: திண்டுக்கல் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மா விவசாயத்திற்கு கோடை மழை பெய்தும் பயன் இல்லாமல் உள்ளதால், விவசாயிகள் புலம்பி தவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், கோபால்பட்டி, சாணார்பட்டி, பழநி, கீரனுார், வடமதுரை, வத்தலக்குண்டு உட்பட பல இடங்களில் மா சாகுபடி செய்யப்படுகிறது. ஏப்ரல் மாத துவக்கத்தில் மா சீசன் துவங்கி, ஜூன் இறுதி வரை நீடிக்கும். சீசன் துவக்கத்தில் போதிய கோடை மழை பெய்தால், மாங்காய் பருமனாக கூடுதல் எடையுடன் விலையும்.

இந்தாண்டு தக்க சமயத்தில் மழை பெய்யவில்லை. இதனால் வெப்பம் தாங்காமல் மாம் பிஞ்சுகள் அதிகளவு உதிர்ந்தன. பாதி விளைச்சலில் உதிர்ந்த மாங்காய்கள், சமையல் பயன்பாட்டிற்காக சொற்ப விலைக்கு விற்பனையானது. கடந்த சில நாட்களில் நத்தம், கோபால்பட்டி, வத்திப்பட்டி, எரமநாயக்கன்பட்டி, காசம்பட்டி, குட்டுப்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக கோடை மழை பெய்தது.

இந்த மழை ஒரு மாதத்திற்கு முன்பு பெய்து இருந்தால் விளைச்சல் நன்றாக இருந்து இருக்கும். அவ்வாறு பெய்யாததால், மாங்காயில் உள்ள விதைகள் பருவத்திற்கு முன்பே முற்றிவிட்டன. மேலும் காற்றுடன் பெய்த மழையால், பெரும்பாலான காய்கள் உதிர்ந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மாம்பழத்தின் விலை நிலவரம்:

திண்டுக்கல் மாவட்டத்தில் தற்போது காய்களின் தரத்தை பொறுத்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செந்துாரம் ரூ.15 முதல் ரூ.20, பங்கனபள்ளி ரூ.30 முதல் 35, காலப்பாடி ரூ.25 முதல் ரூ.30, இமாம்பசந்த் ரூ.60 முதல் ரூ.70. கல்லாமை ரூ.15 முதல் ரூ.20, நீலம் ரூ.25 முதல் ரூ.30, கருங்குரங்கு ரூ.25, மல்கோவா ரூ.49 என மொத்த விலையில் விற்பனையாகிறது என இப்பகுதி வியாபாரிகள் தெரிவித்தனர்.

இது கடந்த ஆண்டை விட கூடுதல் விலை என்றாலும் எதிர்பார்த்ததை விட விளைச்சல் இல்லையே என விவசாயிகள் புலம்புகின்றனர். விவசாயிகள் கூறியதாவது: மா விவசாயிகளுக்கு ஏற்ற விலை கிடைக்காமல் உள்ளது. நல்ல விளைச்சல் இருக்கும்போது, அரசாங்கமாக ஒரு குறிப்பிட்ட விலை வைத்து மாங்காய்களை வாங்கினால் விவசாயிகள் நஷ்டம் அடையாமல் தாங்குவர்.

மேலும் அரசின் சார்பில் ஒரு மாம்பழ சாறு பிழியும் தொழிற்சாலையை அமைக்க ஏற்பாடு செய்தால், மாம் பழங்களை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியும். பழங்கள் கெட்டு போகாமல் இருக்க குளிர்பதன கிடங்கு வசதியும் செய்ய வேண்டும். கிராமப்பகுதியில் உள்ள மக்கள் வேலை வாய்ப்புகளையும் பெறுவார்கள். இந்த திட்டத்தை ஆண்டுதோறும் தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் கூறி ஓட்டுக்கேட்கின்றனர். ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மறந்து விடுகின்றனர், இனியாவது செய்வதற்கு முன்வர வேண்டும், என்றனர்.

Related Stories: