திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய ஊராட்சி நிர்வாகம்

திண்டுக்கல், மே 17: திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ரயில்வேகேட்டில் பிளாஸ்டிக் குப்பைகள், மயானத்தில் தண்ணீர் இல்லாமல் அவதி குறித்து தினகரன் நாளிதழில் வந்த செய்தியை அடுத்து, உடனடியாக பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி, மாயானத்திற்கு தண்ணீர் வசதியையும் பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி நிர்வாகம் செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் அதிகளவு மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக விளங்குவது பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியாகும். இங்கு மாசிலாமணிபுரம் ரயில்வே கேட் அருகே பல நாட்களாக பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டி வந்தனர். தமிழகம் முழுவதும் பாலித்தீன் பைகள் பயன்படுத்த ஜன. 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் மாசிலாமணிபுரம் ரயில்வே கேட்டில் பிளாஸ்டிக் குப்பைகள் குவிந்து கிடந்தன. இது காற்று அடிக்கும் போது பரவி, வீடுகளுக்குள், தெருக்களில் பறந்தது. இவற்றை உண்ணும் கால்நடைகளும் இறந்தன. மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதுடன், மக்காமல் துர்நாற்றம் வீசியது.

இதேபோல மாலப்பட்டி மயானத்தில் அடிகுழாய் செயல்பாடின்றி இருந்தது. அங்கு பிணத்தை எடுத்துசெல்பவர்கள் கை, கால்களை கழுவ முடியாமல் அவதிப்பட்டனர். இதனால் தண்ணீர் குடத்தை சுமந்து செல்லும் நிலை ஏற்பட்டது. மாசிலாமணிபுரம் ரயில்வே கேட் அருகே குவிந்துள்ள பாலித்தீன் கழிவுகளையும், நாகவேனி நகரில் கொட்டப்பட்ட குப்பையை அகற்றக்கோரியும், மயானத்தில் தண்ணீர் வசதி கோரியும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்த விரிவாய செய்தி தினகரன் நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது.

இதன் எதிரொலியாக பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி செயலாளர் ஜான் பாஸ்கோ பிரகாஷ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குருசாமி ஆகியோர் தலைமையிலான அலுவலர்கள் திண்டுக்கல் மாசிலாமணிபுரம் ரயில்வே கேட் அருகே குவிந்து கிடந்த பாலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை சுத்தமாக அகற்றினர். மேலும் மாலப்பட்டி மயானத்தில் அடிகுழாய் மாற்றப்பட்டு தண்ணீர் வருவதற்கும் ஏற்பாடு செய்துள்ளனர். பின்பு கடைகளிலும் பாலித்தீன் விற்பனை குறித்து சோதனை நடத்தினர்.

இது குறித்து ஊராட்சி செயலர் ஜான்பாஸ்கோ பிரகாஷ் கூறியதாவது, ‘பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சியில் சாக்கடை, குப்பைகள் தேங்கி இருந்தால் உடனடியாக பொதுமக்கள் எங்களை தொடர்பு கொண்டு அலுவலகத்தில் தெரிவிக்கலாம். அடிகுழாய், குடிநீர் பிரச்னை இருந்தாலும் தெரிவிக்கலாம். பாலித்தீன் பொருட்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாலித்தீன் வைத்திருந்தால் குப்பை வண்டியில் போடுங்கள். தெருக்களில் பறக்கவிட வேண்டாம். பாலித்தீனை கடைகளில் விற்பனை செய்தாலும் எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம், என்றார்.

Related Stories: