×

மேட்ரிமோனி மூலம் திருமண ஆசை காட்டி திருச்சி பெண் டாக்டரிடம் ரூ.18.70 லட்சம் மோசடி திருவண்ணாமலை இன்ஜினியர், டிரைவர் கைது

லால்குடி, மே 17: மேட்ரிமோனி மூலம் திருமண ஆசைக்காட்டி திருச்சி பெண் டாக்டரிடம் ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் பெற்றுக்கொண்டு அவரை ஏமாற்றிய சிவில் இன்ஜினியர் மற்றும் அவரது கார் டிரைவரை லால்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கைது செய்து சிறையில் அடைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், செல்வவிநாயகர் நகர் பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவரது மகன் சக்கரவர்த்தி (34), சிவில் இன்ஜினியர். திருமணமான சக்கரவர்த்திக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால் சக்கரவர்த்தி மேட்ரிமோனி ஆன்லைன் திருமண தகவல் மையத்தில், தான் ஒரு டாக்டர் எனவும், அஜய், விதுட், விஜயகுமார், கிரிஜாசரவணன் என பல பெயர்களிலும் தன்னை திருமணமாகாதவர் என்று போலியாக பதிவு செய்துள்ளார்.  திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் பிச்சாண்டார் கோயில் வி.என்.நகரை சேர்ந்த செல்வராஜ் மகள் தாமரைச்செல்வி(33). கணவரை இழந்து, ஒரு பெண் குழந்தை உள்ள இவர் புள்ளம்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ளார். தாமரைச்செல்வியும் சக்கரவர்த்தியும் ஒருவரை ஒருவர் தங்கள் மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள தகவல்களை பார்த்து பழக்கம் ஏற்படுத்திக்கொண்டு காதல் கொண்டுள்ளனர். இந்நிலையில் தாமரைச்செல்வியை திருமணம் செய்துகொள்வதாக சக்கரவர்த்தி ஆசைவார்த்தை கூறி காதலித்தார். அதனை நம்பிய தாமரைச்செல்வி அவரிடம் நெருங்கி பழகினார். இந்நிலையில் ரூ.18 லட்சத்து 70 ஆயிரம் ரொக்கத்தை சக்கரவர்த்தியிடம் தாமரைச்செல்வி கொடுத்தார்.



  இதனைத்தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தாமரைச் செல்வி சக்கரவர்த்தியை வற்புறுத்தினார். ஆனால் சக்கரவர்த்தி அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சக்கரவர்த்திக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தை உள்ளது. தாமரைச்செல்விக்கு தெரியவந்தது. தான் ஏமாற்றமடைந்ததை உணர்ந்த தாமரைச்செல்வி திருச்சி எஸ்பி., ஜியாவுல்ஹக்கிடம் புகார் கொடுத்தார். எஸ்பி விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. இதனையடுத்து மதுரை ஐகோர்ட் கிளையில் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய சக்கரவர்த்தியை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி தாமரைச்செல்வி மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிபதி சக்கரவர்த்தியை கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் தனிப்படை அமைத்து சக்கரவர்த்தியை தேடி வந்தனர். அப்போது திருவண்ணாமலையில் உள்ள தனது வீட்டில் தலைமறைவாக இருந்த சக்கரவர்த்தி மற்றும் சக்கரவர்த்தியின் கார் டிரைவர் முருகன் ஆகியோரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சக்கரவர்த்தி தாமரைச்செல்வியை காதலித்து திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியது தெரியவந்தது.
இதுகுறித்து புகாரின் பேரில் சக்கரவர்த்தி, முருகன் ஆகியோர் மீது லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து, அவர்களை லால்குடி குற்றவியல் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை விசாரித்த நீதிபதி இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் இருவரையும் லால்குடி கிளை சிறையில் அடைத்தனர். மேலும் சக்கரவர்த்தி தன்னை டாக்டர் என கூறி மேட்ரிமோனியில் போலியாக கணக்கு தொடங்கி அஜய், விதுட், விஜயகுமார், கிரிஜா சரவணன் போன்ற பல பெயர்களில் பல பெண்களை ஏமாற்றி இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.

Tags : Thiruvannamalai Engineer ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி